சேலத்தில், நீதிமன்ற ஊழியரால் கத்திக்குத்துக்கு உள்ளான நீதித்துறை நடுவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவராக பணியாற்றி வருபவர் பொன் பாண்டி. இந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தவர் பிரகாஷ்.
கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பிரகாஷ், திடீரென்று நீதித்துறை நடுவர் மீது பாய்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார். ஓமலூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த தன்னை, சேலம் நீதிமன்றத்திற்கு இடமாறுதல் செய்ததற்கு பொன் பாண்டிதான் காரணம் எனக்கூறி பிரகாஷ், அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பொன் பாண்டி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பிரகாஷை, அஸ்தம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த நீதித்துறை நடுவர் பொன் பாண்டி, உடல்நலம் பெற்றதை அடுத்து, வியாழக்கிழமை (மார்ச் 3) பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.