சேலம் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் 33,640 குடும்பங்களில் வசிக்கும் 1.42 லட்சம் பேரிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் மற்றும் மேட்டூர் சேலம் கேம்ப் பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் சார்ந்த பகுதிகளாக இருப்பதால் இப்பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவுக்கு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து, வீடுகள்தோறும் ஆய்வு செய்து சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணிகள் மற்றும் அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் தாரமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் செவ்வாய்க்கிழமை (ஏப். 7) நடந்தது. மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை வகித்து பேசினார். அவர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் வீடுகளுக்குச் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறைகளின் ஊழியர்கள் நேரில் சென்று, அவர்களின் வீடுகளில் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஒட்டு வில்லைகள் ஒட்டி அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை விட்டு எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டுகள், சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சன்னியாசிக்குண்டு, களரம்பட்டி, எருமாபாளையம் ஆகிய பகுதிகளும், தாரமங்கலம், மேட்டூர் சேலம் கேம்ப், கெங்கவல்லி, தம்மம்பட்டி ஆகிய பகுதிகள் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதிகளாக 5 கி.மீ., தூரம் வரையறுக்கப்பட்டு உள்ளன.
அங்குள்ள பொதுமக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்து சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணிகள், அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் பகுதிகளான சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள 11000 வீடுகளில் உள்ள 44000 பொதுமக்களிடமும், மேட்டூர் சேலம் கேம்ப்பில் உள்ள 11300 வீடுகளில் வசிக்கும் 48000 பேரிடமும், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொட்டையம்பள்ளி, நாகியம்பட்டி, ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 11340 வீடுகளில் வசிக்கும் 50000 பேரிடமும் என மொத்தம் 33640 வீடுகளைச் சேர்ந்த 1.42 லட்சம் பொதுமக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் கொண்ட 923 குழுக்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, வீடுகள்தோறும் ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக 32 நபர்கள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பணியாளர்கள் ஆய்வுக்காக வீடுகளுக்கு வரும்போது பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் ராமன் பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட எஸ்பி தீபா கனிகர், மாவட்டத் திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் மற்றும் சார் ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.