நவீன தாதியல் முறையை உருவாக்கிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக அவருடைய பிறந்தநாளான மே 12ஆம் தேதி, ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை (மே 12) செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்து செவிலியர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேநேரம், கரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக அனைத்து செவிலியர்களும், செவிலியர் பயிற்சி மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக செவிலியர் தின விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை என கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து செவிலியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி 6 முக்கிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். உறுதிமொழிகள் விவரம் வருமாறு:
நான் இந்த அவையில், இறைவன் முன்னிலையில், எனது வாழ்க்கையை தூய்மையாகவும், எனது தொழிலை அர்ப்பணிப்புடனும் நடத்தி செயல்படுவேன் என உறுதி எடுக்கிறேன்.
எனக்கோ, எனது செவிலிய பெயருக்கோ களங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் நான் விலகி இருப்பேன்.
நோயாளர்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் விளைவிக்கக் கூடிய மருந்தினை கொடுக்கவோ அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்.
எனது சக்திக்கு உட்பட்டு, எனது செவிலிய பணியின் தரத்தை நிலைக்கச் செய்யவும், அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நான் பாடுபடுவேன்.
நான் பணியில் இருக்கும்போது, எனக்குத் தெரியவருகிற நோயாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட ரகசியத்தைக் காப்பேன்.
எனது முழு மனதுடன் மருத்துவர், நோயாளருக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளரின் நலனுக்காக நான் பாடுபடுவேன்.
இவ்வாறு உறுதிமொழிகள் எடுத்துக்கொண்டனர்.