சேலத்தில் நேற்று (ஜூலை 9) ஒரே நாளில் புதிதாக 92 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரம், சிகிச்சையில் இருந்த 66 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 1,796 பேர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுவரை நோய் குணமடைந்து 1,128 பேர் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் 658 கரோனா நோயாளிகளும், வீடுகளில் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 9) ஒரே நாளில் மட்டும் 92 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாநகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில், இதுவரை 57,092 பேருக்கு கரோனா கண்டறியக்கூடிய வகையில் சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேர், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 34 நோயாளிகள் என 66 கரோனா நோயாளிகள் பூரண குணம் பெற்றதை அடுத்து, அவர்கள் நேற்று (09/07/2020) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குணமடைந்தவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியது: கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள், வெளியிடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்; கூட்டமாகச் சேரக்கூடாது என்று தொடர்ந்து விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், நோயின் தன்மை குறித்து அறியாமல் பலர் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுகின்றனர். இதனால் மற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளது.
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு முதல் தடவையாக இருந்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறையாக அதே தவறைச் செய்வோருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்; மூன்றாம் முறையாகவும் முகக்கவசம் அணியாதது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி ஜூலை 7- ஆம் தேதி வரை சேலம் மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து 76.79 லட்ச ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 2.67 லட்சம் ரூபாயும், பேரூராட்சி பகுதிகளில் 1.69 லட்சம் ரூபாயும், ஊராட்சி பகுதிகளில் 13 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 81.28 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
அபராதம் விதிப்பது நோக்கம் அல்ல. என்றாலும், முகக்கவசம் அணிவதன் மூலம் கரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை அறிவுறுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோய்த்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.