Skip to main content

எல்லையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவ வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!!

Published on 07/06/2020 | Edited on 07/06/2020
salem district army man incident district collector

ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த சேலம் ராணுவ வீரரின் உடல், 21 குண்டுகள் முழங்க, சனிக்கிழமையன்று (ஜூன் 6) சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றிலைக்காரன் காடு பகுதியைச் சேர்ந்த பெத்தா கவுண்டர். இவருடைய மகன் மதியழகன் (40). இந்திய ராணுவத்தில், 17- வது மெட்ராஸ் படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர், கடந்த 4- ஆம் தேதியன்று, ஜம்மு யூனியன் பிரதேசத்தில் அக்னூர் செக்டர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்களை எதிர்த்துப் போரிட்ட மதியழகன், துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவருக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

இதையடுத்து தனி விமானத்தில் அவருடைய உடல், கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான இடைப்பாடி வெற்றிலைக்காரன் காட்டுக்கு சனிக்கிழமை (ஜூன் 6) மாலையில் கொண்டு வரப்பட்டது. மதியழகனின் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. வீட்டு வராண்டாவில் அவருடைய உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது.  

salem district army man incident district collector

இதையடுத்து, அவருடைய வீட்டுக்குப் பின்பக்கம் உள்ள அவர்களுடைய தோட்டத்தில் உடல் கொண்டு செல்லப்பட்டு, ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

அதன்பிறகு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட எஸ்பி தீபா கனிகர், திமுக எம்பி பார்த்திபன், திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அதிமுக, தேமுதிக, பாஜக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மதியழகனின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அகற்றி, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மதியழகனின் தந்தை பெத்தா கவுண்டர் இறுதிச்சடங்குகளை செய்தார். 

வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு தமிழரசி (32) என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர். மனைவி தமிழரசி கூறுகையில், ''என் கணவர் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். அது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஆனாலும், எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களை நல்லபடியாக படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்க தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். நான் எம்.ஏ., படித்திருக்கிறேன். எனக்கும் ஏதாவது அரசு வேலை வழங்கி உதவிட வேண்டும்,'' என்றார்.

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், வீரமரணம் அடைந்த மதியழகனின் குடும்பத்தினரிடம் தமிழக முதல்வர் அறிவித்தபடி, 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதியாக வழங்கினார். 

மதியழகன் மரணத்தால் சொந்த ஊர் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
 

சார்ந்த செய்திகள்