சேலத்தில், இந்தோனேஷியாவைச் சேரந்த மத போதகர்கள் பரப்புரையில் ஈடுபட்ட பள்ளிவாசல்கள், மசூதிகளில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி மருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில், அதிகளவில் மக்கள் கூடும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சேலம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கரோனா நோய்த்தொற்றுள்ள நபர்கள் தங்கியிருந்த மசூதிகள், அதன் அருகில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 27) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தீயணைப்பு வாகனங்கள் மூலமும், பணியாளர்களைக் கொண்டும் பவர் ஸ்பிரேயர்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பழமையான சிஎஸ்ஐ கிறித்தவ தேவாலயம், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், சேலம் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு, மார்ச் 11ம் தேதியன்று முஸ்லிம் மதபோதகர்கள் 11 பேர் வந்திருந்தனர். அவர்கள் சூரமங்கலம் சின்னம்மாபாளையம் நூருல் இஸ்லாம் மஜீத் ஜமாஅத் பள்ளிவாசல், செவ்வாய்ப்பேட்டை கன்னாரத்தெருவில் உள்ள பாராமார்கன் பள்ளிவாசல், கிச்சிப்பாளையம் சன்னியாசிக்குண்டு புகாரியா மசூதி ஆகியவற்றில் தங்கியிருந்து மதபோதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
வெளிநாட்டு முஸ்லிம் மதபோதகர்கள் சேலம் வந்து தங்கியிருப்பது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அவர்கள் 11 பேரையும் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மதபோதனைகளில் கலந்து கொண்டவர்கள் பலரும் தங்களுக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில், இந்தோனேஷிய குழுவினர் மத போதனைக்காகச் சென்று வந்த பள்ளிவாசல்கள், மசூதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று என்பது ஆட்கொல்லி நோய்; இது மனித சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு துண்டு அறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யவும், தண்டோரா, ஒலிபெருக்கிகள் மூலம் பரப்புரைகள் செய்யவும் உள்ளாட்சி மன்ற ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் சமூக விலகலை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவெளியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
அவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லும்போது 3 அடி இடைவெளியைப் பின்பற்றி சமூக விலகலை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை இந்தச் சவாலான நேரத்தில் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'' என்றார்.
முன்னதாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டார். காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.