
சேலத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதை அடுத்து, இந்நோய்த் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று அபாயத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் ஒன்றரை மாதத்தில் சேலம் மாநகரைக் காட்டிலும் மாவட்டப் பகுதிகளில் கரோனா பரவும் வேகம் ஓரளவு கட்டுக்குள் இருந்து வந்தது. மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அனைத்து அரசு அலுவலகக் கட்டடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளைச் செய்து வந்தனர்.
இந்நிலையில், ஜூன் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டது மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால் கரோனா பரவுதலும் வேகமெடுத்தது. முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட, பொதுவெளியில் சமூக இடைவெளி விதி பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமல் செல்லும் போக்கும் தொடர்கிறது.
இது ஒருபுறம் இருக்க, சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி, கடந்த ஜூன் 13ஆம் தேதி கரோனா நோய்த்தொற்றால் முதன்முதலில் உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று (ஆக. 17) ஒரே நாளில் 6 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றுடன் 100 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோரில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று மட்டுமின்றி சுவாசக் கோளாறு, நீரிழிவு, சீறுநீரகவியல் நோய்த்தொற்று, ரத்தக்கொதிப்பு, இருதய நோய், காசநோய் உள்ளிட்ட வேறு பல உடல்நலப் பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. சொற்பமான நபர்கள்தான் கரோனா தொற்றால் மட்டும் இறந்தவர்கள்.
ஆக. 17ஆம் தேதி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் இதுவரை 6,185 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சேலம் திரும்பியோர் 392 பேரும் அடங்குவர். நேற்று ஒரே நாளில் 268 பேருக்கு கரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது, இந்த மாவட்டத்தின் ஒரு நாளின் உச்சமாகும்.

இதுவரை சேலம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 757 பேருக்கு சளி தடவல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மாவட்ட சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதுவரை 77 பேர் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகி உள்ளனர். எனினும், இந்நோய்த் தொற்றுக்கு நேற்றுடன் 100 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை உயர்வால், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.