தர்மபுரி அருகே, திருமணத்தை மீறிய உறவால் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், கட்டட மேஸ்திரிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தர்மபுரி அருகே உள்ள குண்டலப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் பாக்கியராஜ் (35). கட்டட மேஸ்திரி. அதே ஊரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (35). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கும் பாக்கியராஜின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்தது. இதையறிந்த பாக்கியராஜ் சந்தோஷ்குமாரை பலமுறை எச்சரித்தார். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சந்தோஷ்குமார், இனி தன் மனைவியை சந்திக்கக் கூடாது என்று உத்தரவாதம் பெறப்பட்டது. அதன்பிறகும் சந்தோஷ்குமார் பாக்கியராஜின் மனைவியுடன் உறவைத் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு, செப். 13ம் தேதி, உள்ளூர் கோயில் அருகே பாக்கியராஜ் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தோஷ்குமாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பாக்கியராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரை சரமாரியாக குத்திக் கொலை செய்தார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக மதிகோண்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மோனிகா மார்ச் 20ம் தேதி தீர்ப்பு அளித்தார். பாக்கியராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார்.