சேலம் அருகே உள்ள மூக்குத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் மகேஷ் (30). கார் மெக்கானிக்கான இவர், சீலநாயக்கன்பட்டியில் சொந்தமாக கார் பட்டறை வைத்து நடத்தி வந்தார். பிப். 28ம் தேதி காலை வழக்கம்போல, பட்டறைக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், மூக்குத்திப்பாளையம் தாழம்பூ ஏரிக்கரையில் மகேஷ் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லூர் காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் விவகாரம் ஒன்றில் மகேஷ் பஞ்சாயத்து பேசியதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், சபரி, சக்திவேல் ஆகிய மூவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மூக்குத்திபாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வாட்ஸ்அப் மூலமாக 'ஐ லவ் யூ' என்று குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அடிக்கடி காதல் கவிதைகளும் எழுதி அனுப்பி வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள், விஜயகுமாரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரம் மகேஷூக்கு தெரிய வந்தது. அவர், இருதரப்பையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளார். இதில், தற்போது காவல்துறை வசமுள்ள ஜீவானந்தத்திற்கு, மகேஷ் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.
இந்த நிலையில்தான், சம்பவத்தன்று இரவு மூக்குத்திபாளையத்தில் ஒரு கோயில் விழாவில், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியை காண்பதற்காக மகேஷ் அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜீவானந்தம் மற்றும் அவருடைய கூட்டாளிகள் சபரி, சக்திவேல் ஆகிய மூவரும் மகேஷை வழிமறித்து ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் உள்ளிட்ட மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேஷை சரமாரியாக குத்தியதுடன், அரிவாளாலும் கழுத்தை அறுத்துள்ளனர். இதில் மகேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
தற்போது மூன்று பேரை மடக்கிவிட்ட காவல்துறையினர், இந்த கொலை தொடர்பாக மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.