அருண்குமார்
தங்கை மீதான ஒருதலைக்காதலை கைவிட மறுத்ததால் இளைஞரைச் சரமாரியாகத் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளி ஒருவரை ஆத்தூரில் காவல்துறையினர் திங்கள்கிழமை (மே 18) கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அருண் என்கிற அருண்குமார் (19). பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துவிட்டு கூலி வேலைக்குச் சென்று வந்தார்.
கடந்த சனிக்கிழமை (மே 16) காலை 11.45 மணியளவில், அருண்குமார் ரேஷன் கடையில் சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு அம்பேத்கர் நகர் லீ பஜார் ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில், ஆத்தூர் மந்தைவெளி தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலு மகன் சதீஸ் (22) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் நண்பர் ஒருவருடன் வந்தார்.
அவர், அருண்குமாரை பார்த்தவுடன் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார். நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்குமாரை நெஞ்சு, வயிற்றுப்பகுதியில் காலால் சரமாரியாக உதைத்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை விலக்கி விட்டதை அடுத்து, அருண்குமார் வீட்டுக்குச் சென்று விட்டார். சம்பவத்தன்று மாலையில் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (மே 17) உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆத்தூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சதீஸின் சித்தப்பா மகளைக் கொலையுண்ட அருண்குமார் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அதனால் தன் தங்கை மீதான காதலை கைவிடச்சொல்லி அருண்குமாரை தாக்கியதில், அவருக்கு மண்ணீரல் உறுப்பு சிதைந்துள்ளது. அதனால்தான் அவர் சிகிச்சை பலனின்றி இறந்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
சதீஸ்
கொலையாளி சதீஸ் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவருமே ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விவகாரம் பெரிய அளவில் விசுவரூபம் எடுக்காமல் அமுங்கியது. காவல்துறையினர் சதீஸை தேடி வந்த நிலையில், அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆத்தூர் நகர காவல்துறையினர் கள்ளக்குறிச்சியில் வைத்து அவரை கைது செய்தனர். இதையடுத்து சதீஸ், ஆத்தூர் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
இச்சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.