சேலத்தில் பிரபல இனிப்பக நிறுவனம் ஒன்று உணவகம் மற்றும் அவுட்டோர் கேட்டரிங் சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், தீபாவளி பண்டிகையின்போது வழக்கத்தைவிட கூடுதலாக இனிப்பு பண்டங்கள், பால் பொருட்களை தயாரித்து சிறப்பு விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், நடப்பு தீபாவளி விழாவையொட்டி அந்நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகள் அடங்கிய (அசார்ட்டடு) கிப்ட் பாக்ஸ்களில் காலாவதி தேதி, பேக்கிங் செய்யப்பட்ட நாள், விற்பனை விலை, பேட்ச் எண் உள்ளிட்ட அடிப்படையான விவரங்கள் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
கிப்ட் பாக்ஸ்களை ஒரு மக்கக்கூடிய பையில் போட்டுத் தருகிறது. அந்தப் பையின் மீது, பால் பொருள்களை வாங்கிய அன்றே பயன்படுத்தி விடுங்கள் என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகம் அச்சிட்டு இருந்தது. இதனால் குழம்பிப்போன வாடிக்கையாளர்கள், இவை கெட்டுப்போன பால் பொருள்களாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர். மேலும், ஒரே நாளில் எப்படி அனைத்தையும் உண்பது என்றும் குழம்பினர்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சேலம் நான்கு சாலை, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம் சாலை, சாரதா கல்லூரி சாலை, அருணாச்சல ஆசாரி தெரு ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் நேரில் ஆய்வு செய்தனர்.
இனிப்புகள், பால் பொருள்கள் தயாரிக்கும் கூடமான சீலநாயக்கன்பட்டி கிளையிலும் சோதனை நடத்தினர். பேக்கிங் மற்றும் காலாவதி தேதி விவரங்கள் இல்லாமல் ஒரு கிப்ட் பாக்ஸ் கூட விற்பனை செய்யக்கூடாது என அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் எச்சரித்தனர்.
இதையடுத்து, அந்நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து விதமான இனிப்புகளின் கிப்ட் பாக்ஸ்களிலும் பேக்கிங் தேதி, காலாவதி தேதி, விற்பனை விலை, எடை அளவு, பேட்ச் எண் ஆகிய அடிப்படை விவரங்களை அச்சிட்ட வில்லையை ஒட்டியது. அதன்பிறகே விற்பனைக்கு அனுமதித்தது உணவுப்பாதுகாப்புத்துறை.
இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ''புகார் வரப்பெற்றதை அடுத்து அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினோம். பால் பொருள்கள் கொண்ட கிப்ட் பாக்ஸ்களில் மட்டும் காலாவதி தேதி, பேக்கிங் விவரங்கள் இருந்தன. மற்ற பண்டங்களின் பாக்ஸ்களில் அந்த விவரங்கள் இல்லை. எச்சரிக்கை செய்ததை அடுத்து, அனைத்து அடிப்படை விவரங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டினர். அதன் பிறகுதான் விற்பனை செய்ய அனுமதித்தோம்'' என்றார்.