கலப்பட ஜவ்வரிசி ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சேலம் மாவட்டத்தில் 164 ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. இதில் ஒரு சில ஆலைகளில் மக்காச்சோள மாவு, இன்டஸ்ட்ரியல் ஸ்டார்ச் மற்றும் அனுமதிக்கப்படாத அமிலம் பயன்படுத்தி வருவதை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்பு துறை, சேகோசர்வ், வணிக வரித்துறை, மாசுக்கட்டுப்பாடு வாரியம், தொழிலாளர் துறை உள்பட 7 துறைகள் அடங்கிய ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர் நேற்று முன்தினம் அயோத்தியாப்பட்டணம் பகுதிகளில் உள்ள 4 ஜவ்வரிசி ஆலைகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு ஆலையில் அனுமதிக்கப்படாத அமிலம் மூலம், ஜவ்வரிசி தயாரித்து இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள், அந்த ஆலையின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இன்னொரு ஆலையில் மக்காச்சோள மாவு கலப்படம் செய்துள்ளதால், அங்கிருந்த 12,000 கிலோ ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஓமலூர் அருகே சக்கரசெட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் 2 கரும்பு ஆலைகளில், கரும்புக்கு பதிலாக, சர்க்கரையில் வெல்லம் தயாரிக்கப்படுவதாக, வாட்ஸ்அப் புகாரையடுத்து, நேற்று முன்தினம் அங்கு சோதித்து 16 மூட்டை சர்க்கரையை பறிமுதல் செய்தனர். மேலும், 2 ஆலைகள் மீதும் உணவு பாதுகாப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.