கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பகுதிக்கு அருகே உள்ளது பட்டரிவிளை கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான அருள். மெக்கானிக்கல் இஞ்சினியரான இவர், அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். எந்த நேரமும் செல்போனே கதி என இருக்கும் அருள், பேஸ்புக்கில் ஏராளமான பெண்களுடன் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடும் அருளுக்கு, பெங்களூரு அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னுடைய மகன் வயதில் இருக்கும் அருளிடம், அந்த மூதாட்டி தினந்தோறும் பேசி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அருளிடம் தனது செல்போன் நம்பரை பகிர்ந்த மூதாட்டி, அவரை நம்பி தனது புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இதனிடையே, சில நாட்கள் கழித்து, அந்த பெங்களூரு மூதாட்டியிடம் செல்போனில் பேசிய அருள், "உங்களோட போட்டோவ மார்பிங் பண்ணி பேஸ்புக்குல லீக் பண்ணப்போறேன்" என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி, "என்னங்க சொல்றீங்க.. ப்ளீஸ் அப்படிலாம் பண்ணிடாதீங்க" என கண்ணீருடன் கதறியுள்ளார். இதனை, அருள் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அந்த மூதாட்டியை மிரட்டி அன்றைய தினமே கூகுள் பே மூலம் 12 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
அதன்பிறகு, சிறிது நாட்கள் கழித்து மீண்டும் வந்த அருள், "தனக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். மேலும், பணம் தராவிட்டால் இந்த மார்பிங் போட்டோக்களை உங்கள் கணவருக்கு அனுப்பிவிடுவேன்” என மிரட்டியுள்ளார். ஒருகட்டத்தில் மனமுடைந்த மூதாட்டி, என்ன செய்வது என தெரியாமல் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தனது உறவினர்கள் உதவியுடன் பெங்களூரு புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர் பகுதிக்கு வந்த கர்நாடக போலீசார், இரணியல் போலீசாரின் உதவியுடன் அருளை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, பெங்களூரில் அவரிடம் நடத்திய போலீஸ் விசாரணைக்கு பிறகு, அருள் மீது பெண்மைக்கு களங்கம் விளைவித்தல், பெண்ணை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகன் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.