Skip to main content

கவிக்கோ அப்துல்ரகுமான் முதலாமாண்டு நினைவுனாள்! (2.6.2018) சிறப்புக் கவிதை!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
S. Abdul Rahman

 

தத்துவ நாயகன்!
------------------------
 

கவிக்கோவே! கவிதைகளால் எங்கள் நெஞ்சைக்
காந்தம்போல் ஈர்த்தவனே! கனவுக் காரா!
தெவிட்டாத கற்பனையால் எம்மை யெல்லாம்
தேனாற்றில் மூழ்கடித்த ஞான வானே!
செவியோடும் விழியோடும் இழைந்தி ருந்து
செழுங்கவிதை உணவூட்டி வளர்த்த தாயே!
தவித்தலைந்து தேடுகிறோம் எங்கே?சென்றாய்?
தத்துவத்தின் நாயகனே! எங்கே சென்றாய்?
 

உன்முகத்தை ஓராண்டாய்ப் பார்க்க வில்லை!
உன்குரலை ஓரண்டாய்க் கேட்க வில்லை!
உன்னிதழில் மலர்கின்ற குறுஞ்சி ரிப்பை
ஓராண்டாய் எங்கள் மனம் துய்க்க வில்லை!
அன்றாடம் நினைவுகளாய் வந்து சென்றும்
ஆழ்மனதின் தவிப்பெதுவும் நீங்க வில்லை!
என்றாலும் உன்வருகை நிகழு மென்ற 
எதிர்பார்ப்பில்  காத்துள்ளோம் வருவா யாநீ?
 

தானத்தில் உன்தானம் கவிதை தானம்
தமிழுக்கும் அதுதானே ரத்த தானம்
ஞானத்தில் உன்ஞானம் உயர்ந்த ஞானம்
ஞாலத்தின் ரகசியங்கள் உணர்ந்த ஞானம்
வானத்தில் உன்வானம் வசந்த வானம்
வைகறையாய் வழிகிறது உந்தன் கானம்
மோனத்தில் மூழ்கிவிட்ட  ஞானத் தேரே!
முகாரியை இசைக்கிறது எங்கள் வீணை!

சார்ந்த செய்திகள்