திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடந்த வாரம் உயிரிழந்த சுபஸ்ரீ அவர்களின் இல்லத்திற்கு நேற்றைய தினம் சென்று அவருடைய பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதையொட்டி இன்று (18-09-2019) அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
சாலை தடுப்பில் வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீயின் இல்லத்துக்கு நேற்று சென்றேன். ஆறுதல் சொல்லித் தேற்றமுடியா இழப்பு. தங்கள் மகளின் இறுதி நிமிடத்தை, ஆட்சியாளர்களின் அகங்காரத்தை, தங்களுக்குக் கைகொடுத்த நல்லுள்ளங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டனர் அவரின் பெற்றோர்.
“சுபஸ்ரீ இல்லைங்கிறதையே எங்களால இன்னும் நம்ப முடியலை சார். டிராஃபிக் ரூல்ஸை முறையா ஃபாலோ பண்ணுவா. அந்த பேனர் மேல சாயவும், அவளால ஸ்டெடி பண்ணமுடியாம கீழ விழுந்திருக்கா. இது விபத்தே கிடையாது. எல்லாத்துக்கும் அந்த பேனர்தான் சார் காரணம்” & கண்கலங்கியபடி அந்தநாளை விவரிக்கிறார் சுபஸ்ரீயின் தந்தை ரவி.
“குழந்தை அடிபட்டு அரைமணிநேரமா கீழ கிடந்திருக்கா சார். ‘இந்த இடம் எந்த ஏரியா லிமிட்ல வருது’னு சர்ச்சை பண்ணிட்டு இருந்திருக்காங்க. அதுவரை ஒரு ஆம்புலன்ஸ்கூட வரலையாம். நல்லவங்க நாலு பேர் ஒரு லோடு ஆட்டோவுல தூக்கிட்டுப்போயிருக்காங்க. இந்த இழப்புக்கு நாங்க யாரையும் குற்றம் சொல்லலை. இருந்தாலும், ‘ஆயிரம் பேனர்கள் வைக்கும்போது ஒரு பேனர் விழத்தான் செய்யும். வாகனம் ஓட்டிகள்தான் கவனமாகச் செல்லவேண்டும்’னு சிலர் பேட்டி கொடுக்கிறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு.” & சுபஸ்ரீயின் அம்மா பேச்சிலிருந்து தாயின் தவிப்பை புரிந்துகொள்ளமுடிந்தது.
“என் மகள் இறந்த செய்தி கேள்விப்பட்டு வந்த பல்லாவரம் தி.மு.க எம்.எல்.ஏ., கடைசிவரைகூட இருந்து, எஃப்.ஐ.ஆர், இறப்புச் சான்றிதழ் வாங்குறது வரை அவ்வளவு வேலைகள் செஞ்சிக்கொடுத்திருக்கார். இப்ப திமுக சார்பில் நீதிமன்றத்துல பிரமாணப்பத்திரம் தாக்கல் பண்ணினது வரை இந்த விஷயத்தில் உங்க தலைவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்” & அந்தச் சூழலிலும் உதவியவர்களை பாராட்டி கைகூப்பி நன்றி சொல்கிறார் ரவி.
சுபஸ்ரீயின் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவரின் அம்மா கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோள் வைக்கிறார். “இன்னைக்கு என் பொண்ணு போயிட்டா, நாளைக்கு இன்னொருத்தருக்கும் அப்படித்தானே நடக்கும். சுபஸ்ரீக்கு நடந்ததுதான் எல்லாருக்கும். இந்த பேனர் கதையை சுபஸ்ரீயோட சுபமா முடிச்சிரணும் சார். இனிமே யாரும் பேனரால இறந்தாங்கனு வரவேக்கூடாது.”
இந்த சந்திப்பை முன்வைத்து, நம் இளைஞர் அணித் தோழர்களிடம் சொல்வதற்கு சில விஷயங்கள் உள்ளன. நமது கழகத் தலைவரின் அறிவுறுத்தியபடி, ‘பேனர்களை புறந்தள்ளுவதில் தி.மு.க இளைஞர் அணியினர் முன்மாதிரியாக திகழவேண்டும். அதுதான், சுபஸ்ரீயை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கு நாம் கொடுக்கும் ஆறுதல். இன்றுகூட நம் கழகத் தலைவர் சுபஸ்ரீயின் வீட்டுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மக்களின் வாக்குகளைவிட அவர்களின் மனங்களை வெற்றிகொள்ளவே உழைக்கிறோம்’ என்று கூறியிருந்தேன். அந்தவகையில் சுபஸ்ரீயின் பெற்றோரின் மனங்களை வெற்றிகொண்ட அண்ணன்கள் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி இருவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் சுபஸ்ரீயை எப்படியாவது உயிர்பிழைக்கவைத்துவிடலாம் என்று பதைபதைப்புடன் அவரை லோடு ஆட்டோவில் ஏற்றிச்சென்ற அந்த நான்கு நல்ல உள்ளங்களை நோக்கி வணங்கி நிற்கிறேன்.
இந்த பேனர் கலாச்சாரம், சுபஸ்ரீயின் மறைவோடு முடிந்துபோகட்டும்! நன்றி, வணக்கம்.