டிஜிட்டல் பேனர்கள் அமைப்பது தொடர்பாக 6 மாதங்களில் உரிய சட்டத்திருத்தங்களை கொண்டுவர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
டிஜிட்டல் பேனர்களை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் மற்றும் தண்டனை விதிப்பதற்கான அதிகாரங்களை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும் விதிகளை மீறி ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவது தொடர்வதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் எற்கனவே சட்டவிரோத பேனர்கள் வைப்பது தொடர்பாக பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு மனுவை விசாரணை ஏற்க வேண்டியதில்லை என தெரிவித்தனர்.
மேலும், பேனர் வைக்க அனுமதி எண், வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை பேனர்களில் இடம்பெறச் செய்வதை கட்டாயமாக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவர 6 மாத கால கெடு விதித்து உத்தரவிட்டனர்.
அரசின் சட்ட விதிகளை பின்பற்றி உரிய அனுமதியை பெற்றால் மட்டுமே பேனர் வைக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், அனுமதியில்லாமல் பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.