Skip to main content

ஆளுங்கட்சிக்கு நிர்வாகத் திறமை இல்லை... கவுன்சிலர்கள் கூட்டத்தில் சலசலப்பு!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

kadaloor

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் மனோகரன், ராஜலட்சுமி, முத்துக்கண்ணு, சிவக்குமார், ஏழுமலை, முத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதில் கவுன்சிலர்கள் பரிந்துரை செய்யும் பயனாளிகளுக்கு மத்திய அரசின்  'ஜீவன் தாரா கிணறு' வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மேலும், ஒன்றியத்தில் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யாததால், பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இதனால், தேர்தலின்போது மக்கள் எங்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, அரசும் மாவட்ட நிர்வாகமும் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு கவுன்சிலர்களும் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.

 

அப்போது நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் நாகராஜன், ஆளுங்கட்சிக்கு நிர்வாக திறமை இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி பேசினார். இதனால், அதிருப்தியடைந்த அ.தி.மு.க கவுன்சிலர் முத்து, மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு வழங்காததற்கு ஆளும் கட்சிக்கு நிர்வாகத் திறமை குறைவு என்று கூறுவது அர்த்தம் இல்லாதது என்று மறுத்துப் பேசினார். இதனால், இருவருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

அவர்களை சமாதானப்படுத்திவிட்டு பேசிய சேர்மன் செல்வி ஆடியபாதம் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப் பணிகளைச் செயல்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்துள்ளோம். விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று வார்டு வாரியாக ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் மக்கள் முன் வைத்த கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு, திட்டம் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்று கூறினார்.

 

Ad

 

இந்தக் கூட்டத்தின் போது துணை சேர்மன் ஜான்சி மேரி மற்றும் அதிகாரிகள் தரப்பில் ஒன்றிய ஆணையர்கள் காமராஜ், ஜெயகுமார், மேனேஜர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்