பா.ஜ.க.வின் அடித்தளமான பரிவார் அமைப்புகளில் ஒன்றான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தாங்கள் மிசா காலத்தில் நெருக்கடி நிலையை அனுபவித்ததுடன் சிறைக் கொடுமைக்குள்ளானோம். இப்போது முதிர்ந்த வயதில் வாழ்வாதாரமின்றி துன்பப்படுகிறோம். மிசாவில் சிறை சென்ற எங்களைப் போன்ற தியாகிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று உரிமைக் குரலெழுப்புகிறார்கள்.
1974ளில் தேசத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் உள்ளங்கையில் வைத்திருந்த இரும்புப் பெண்மணியான பிரதமர் இந்திரா காந்தி. 1975 ஜூன் 25ம் நாள் நடு இரவின் போது MAINTENANCE OF INTERNAL SECURITY ACT எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்பு சட்டமான, மிசா, என்கிற நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். அதன்படி பத்திரிகைச் சுதந்திரம் நசுக்கப்பட்டு செய்திகள் தணிக்கைக்குட்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி அல்லாத பரிவார் அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ். ஆனந்தமார்க் போன்ற கலாச்சார அமைப்புகள் தடை செய்யப்பட்டன. அப்போதைய ஜனசங்கம், லோக்தள் ஸ்தாபன காங்கிரஸ், சோஷலிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொடர்ந்து லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் சத்யாகிரகப் போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் சென்னையில் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் என்று அனைவரும் கொட்டடியில் அடைக்கப்பட்டனர். சித்ரவதைக்குட்படுத்தப்பட்டனர். காலை 10 மணி அரசு அலுவலக நேரமென்றால் 9.50க்கே நாட்டின் அனைத்து அரசு ஊழியர்களும் அவரவர் அலுவலக இடத்தில் ஆஜரானார்கள். ஏன் என்று கேட்க முடியாத நேரம். அவசர நிலை காலத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியின் தொண்டர்கள், அப்போது இளைஞராய் இருந்த தி.மு.க.வின் ஸ்டாலின் போன்றோர் சிறைச் சித்திரவதைக்குள்ளானார்கள்.
சங்கரன்கோவிலில் நெருக்கடி நிலை கால ஆர்.எஸ்.எஸ். போராட்ட வீரர்கள் சங்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் 3வது மாநில மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கந்த குமார் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் ஓம் சக்தி பாபு முன்னிலை வகித்தார். பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன், நெருக்கடிநிலை கால போராட்ட வீரர்கள் சங்க அகில இந்திய தலைவர் கோவர்த்தன் பிரசாத் அடல், துணைத் தலைவர் ஆனந்த ராஜன், அசோக் குமார் யாதவ், கேரள மாநில தலைவர் ராதா கிருஷ்ணன், மாநில பொருளாளர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இல. கணேசன் பேசியதாவது, மிசா காலத்தில் பல இன்னல்களை அனுபவித்த தியாகிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். ரயிலில் ஏசி கோச்சில் மிசா காலச் சிறை சென்றவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும். மிசா காலத்தில் சிறை சென்றவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம். மிசா காலத்தில் போராடிய தியாகிகளுக்கு உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம். சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரகாண்ட், மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள், தியாகிகள் பென்சன் போக்குவரத்து சலுகை மற்றும் இலவச மருத்துவ உதவி வழங்கி வருகிறது. இது போல் தமிழக அரசும் மிசா கால தியாகிகளுக்கு சலுகைள் வழங்க வேண்டும். நீண்ட காலமாக எதிர் பார்த்திருந்த பல கோரிக்கைகள் தற்போது நிறைவேறி வருகிறது. காஷ்மீரின் 370 சட்டப் பிரிவை நீக்கவேண்டும். முத்தலாக் தடை சட்டம், சி.ஏ.ஏ. அமலாக்கம், ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது இவ்வாறு இல.கணேசன் பேசினார்.