ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளதாக அரசு கூறுகிறது. கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க முகக்கவசம், தனி மனித இடைவெளி, சோப் அல்லது சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்துவது போன்றவையே ஒரே வழி என அரசு அறிவித்துக்கொண்டே இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் முதலில் முகக்கவசம் அணியாமல் பலர் சுற்றிக் கொண்டிருந்தனர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூபாய் 200, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 500 என்றும், பொது இடங்கள் தனி மனித இடைவெளி கடை பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500 மற்றும் மக்கள் நெருக்கமாக இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களுக்கு ரூபாய் 5,000 அபராதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் உயரதிகாரிகள் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இணைந்து இந்த அபராதங்களை விதித்து வந்தனர். மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு மட்டும் 100 பேருக்குமேல் முகக் கவசம் அணியாமல் வருவது, பொது இடங்களில் எச்சில் துப்புவது என அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சென்ற இரண்டு மாதங்களில் 6,500 பேருக்கு இப்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 15 லட்சம் அபராத தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.