நாமக்கல் அருகே ரிக் லாரி நிறுவன மேலாளரிடம் அவருடைய மகளுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் நூதன முறையில் மோசடி செய்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளி பேரூராட்சி தேவஸ்தான புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (48). ரிக் லாரி நிறுவன மேலாளர். இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் குறுந்தகவல் வந்தது. அதை நம்பிய முத்துசாமி அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தன்னுடைய மகளுக்கு சீட் கேட்டுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர், கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைக் கேட்டு வாங்கியுள்ளார்.
அதையடுத்து, சில நாட்கள் கழித்து முத்துசாமியின் மகளுக்கு சீட் உறுதி ஆகிவிட்டது என்று கூறி, முன்தொகையாக 12 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். மகளுக்கு சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரும் அந்த நபரிடம் கேட்ட தொகையைக் கொடுத்துள்ளார்.
ஆனால், பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் மகளுக்கு சீட் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த மர்மநபரின் செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தான் ஏமாந்துவிட்டதாகக் கருதிய முத்துசாமி, இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.