சீர்காழி அருகே கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் ஒருவர் வீட்டில் சோதனையிட்டதில் ரூ.1 கோடி மதிப்புள்ள கிரய பத்திரங்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு கந்துவட்டி தொழிலை நடத்திவந்த தாய், மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர், அதேபகுதியில் மெடிக்கல் ஷாப் சொந்தமாக நடத்திவருகிறார். வாசுதேவன், வழுதலைகுடியைச் சேர்ந்த சோலையம்மாள் மற்றும் அவரது மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரிடமும் கடந்த 2019ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் கடன் பெற்றதற்காக, வீட்டை அடமானமாக கிரய பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அதற்கு உண்டான அசல் மற்றும் வட்டி என 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தும் அதனையும் மீறி ரூ.7 லட்சம் கொடுத்தால்தான் பத்திர பதிவு ரத்து செய்து தருவேன் என சோலையம்மாளும் ஜெயவீரபாண்டியனும் கூறியுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் பேரில் சீர்காழி போலீசார், சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்வதற்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பலருக்கு கடன் கொடுத்த வகையில் அடமானமாக கிரயம் பெற்ற 30 பத்திரங்கள். வெறும் கையெழுத்து மட்டும் பெற்ற 11 பத்திரங்கள் என ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் போலீசாரிடம் சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார், சோலையம்மாளையும், அவரது மகன் வீரபாண்டியனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.