Skip to main content

கூலிப்படை ரவுடி கொலை வழக்கு: வாட்ஸ்அப் மூலம் நெட்வொர்க் அமைத்து வியூகம் வகுத்தது அம்பலம்!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

rowdy incident whatsapp group police investigation

 

சேலம் அருகே கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் கைதான கும்பல், வாட்ஸ்அப் மூலம் நெட்வொர்க் ஏற்படுத்தி, ரவுடியை நீண்ட நாட்களாகக் கண்காணித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

 

சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் திருநாவுக்கரசு (வயது 26), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. அதிமுக ஆட்சியின்போது அக்கட்சியில் கூலிப்படை ரவுடியாக செயல்பட்டுவந்தார். இவருடைய மனைவி ரம்யா. தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். திருமணத்திற்குப் பிறகு திருநாவுக்கரசு மனைவியுடன், சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் தனியாக வீடு எடுத்து வசித்துவந்தார். 

 

இந்நிலையில், ரம்யாவின் தந்தை செந்தில்குமார், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருந்ததால், அவரை சபரி மலைக்கு வழியனுப்பிவைப்பதற்காக டிச. 17ஆம் தேதி திருநாவுக்கரசு தனது மனைவியுடன் நாழிக்கல்பட்டிக்குச் சென்றார். 

 

அங்கு தனது நண்பரான சரவணன் என்பவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று வந்த 15 பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தது. அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டிப் போட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. 

 

பலத்த வெட்டுக்காயங்களுடன் கிடந்த இருவரையும் உள்ளூர்க்காரர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 

இச்சம்பவம் குறித்து மல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 2019ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் என்ற கல்லூரி மாணவரை திருநாவுக்கரசு, சரவணன், சூர்யா என்கிற சரவணன் ஆகிய மூவரும் இரும்பு கம்பியால் தாக்கியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். அந்தக் கொலைக்குப் பழிதீர்க்கும் வகையில் திருநாவுக்கரசுவும், சரவணனும் தற்போது கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

இந்தக் கொலையில் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உள்பட 15 பேருக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கவுதம் என்கிற கவுதமன் (வயது 21), பாலியான் (வயது 24), பாலாஜி (வயது 20), தமிழன்பன் (வயது 35), தங்கவேல் (வயது 34), குமரேசன் (வயது 32), அழகுமணி என்கிற அழகுமணிகண்டன் (வயது 22) மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

rowdy incident whatsapp group police investigation

 

கைது செய்யப்பட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, ''எங்களுடைய நண்பர் திலீப்குமாரும், திருநாவுக்கரசுவும் ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் இருந்தனர். விநாயகர் சதுர்த்தி விழாவிலிருந்து அவர்களிடையே மோதல் ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனர். மேலும், திலீப்குமார் திடீரென்று அதிமுகவை விட்டு திமுகவுக்கு வேலை செய்யச் சென்றதும் திருநாவுக்கரசுவுக்கு பிடிக்கவில்லை. 

 

இந்த நிலையில்தான் கடந்த 2019ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட தகராறில், திலீப்குமாரை திருநாவுக்கரசு உள்ளிட்ட மூன்று பேர் கொலை செய்தனர். 

 

திலீப்குமாரின் சாவுக்கு முக்கிய காரணமான திருநாவுக்கரசு, சரவணன் ஆகிய இருவரையும் எப்படியும் போட்டுத்தள்ள வேண்டும் என்று அப்போதே சபதம் செய்திருந்தோம். 

 

இதற்காக வாட்ஸ்அப்பில் திலீப்குமாரின் நண்பர்கள் மட்டும் ஒரு குழுவைத் தொடங்கி, அதில் திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோரின் நடமாட்டம் குறித்து அன்றாடம் தகவல்களைப் பகிர்ந்துவந்தோம். இந்நிலையில்தான் சபரி மலைக்குச் செல்லும் மாமனாரை வழியனுப்பிவைக்க வந்த திருநாவுக்கரசுவையும், அவரிடம் பேசிக்கொண்டிருந்த சரவணனையும் கொல்ல திட்டமிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினோம். இதில் திருநாவுக்கரசு இறந்துவிட்டான். ஆனால் எப்படியோ சரவணன் மட்டும் குற்றுயிரும், குலையுயிருமாக சிகிச்சை பெற்றுவருகிறான்,'' என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். 

 

இவர்களில் குமரேசன், தமிழன்பன், தங்கவேல் ஆகிய மூவரும்தான் கொலை கும்பலை ஒன்றுதிரட்டி, வாட்ஸ்அப் வழியாக அவர்களை வழிநடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்