கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவபுரி பிரதான சாலையில், நடந்து சென்ற லாரி ஓட்டுநர் புகழேந்தி (46) என்பவரை, அண்ணாமலை நகர் மண்ரோட்டைச் சேர்ந்த சக்திவேல் மகன் மர்டர் பாபு என்கிற பாபு (43) வழிமறித்து, கத்தியைக் காட்டி ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகழேந்தி அளித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் மற்றும் காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், கஜேந்திரன், விஜயகுமார், ரமணி ஆகியோர் சென்று அண்ணாமலை நகர் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகே பதுங்கி இருந்த பாபுவை கைது செய்து அவரிடமிருந்து வீச்சரிவாள் ஒன்றும் மற்றும் ஒரு பவுன் தங்க சங்கிலியைக் கைப்பற்றினர்.
அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பாபு கீழே விழுந்ததில் இடதுகை முறிவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாபுவை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பாபு மீது அண்ணாமலை நகரில் அண்ணன், தம்பியை கொலை செய்த இரட்டை கொலை வழக்கில் வெகு நாட்களாக நீதிமன்றம் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழிப்பறி வழக்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.