
திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திரப்பதிவேடு ரவுடி அக்பர்கான்(33). இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் அறிக்கை ஒன்றை நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில் அக்பர்கான், நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அப்போது, ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை அக்பர்கான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனை நீதிமன்ற ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் தற்போது அக்பர்கான் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஆட்டோ டிரைவரை கம்பியைக் காட்டி மிரட்டியது தொடர்பான புகார்கள் கோட்டை காவல்நிலையத்தில் பதிவாகின. இதனைத் தொடர்ந்து அக்பர்கான், நன்னடத்தை உறுதி மொழியை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அக்பர்கான், தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில் குற்றச்செயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 142 நாட்களை சிறையில் கழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்பர்கான் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.