சேலத்தில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் தாதகாப்பட்டி வசந்தம் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் கார்த்திக் (37). ரவுடியான இவர், பல்வேறு வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த ஜூன் 22ம் தேதி களரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவரை திடீரென்று வழிமறித்த ரவுடி கார்த்திக், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2150 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவத்தில் கார்த்திக்கை கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். விசாரணையில், கடந்த ஜூன் 23ம் தேதி, நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கசங்கிலியை இவர் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. தொடர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர துணை ஆணையர் லாவண்யா, காவல்துறை ஆணையருக்குப் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.