![Rosaiah's death - Chief Minister MK Stalin's condolences!](http://image.nakkheeran.in/cdn/farfuture/A2BdWCrCq-VEHV6rqFaDIEGhidEjesQvoJLUCnlj--s/1638593519/sites/default/files/inline-images/mksa333333.jpg)
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ரோசய்யா (வயது 88) இன்று (04/12/2021) காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஐதராபாத்தில் காலமானார்.
ரோசய்யா மறைவுக்குப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்திக் கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆந்திர முதலமைச்சராக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக ஆளுநராகப் பணியாற்றிய அவர், சட்டமன்ற உறுப்பினர், மேலவை உறுப்பினர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணியாற்றியவர். அரசியலில் முதிர்ந்த அனுபவம் கொண்ட அவர் காங்கிரஸ் இயக்கத்தின் தேசியத் தலைவர்களின் அன்பைப் பெற்றிருந்தவர். அரசியல் சட்ட மாண்புகள் குறித்து நன்கு அறிந்த அவரது மறைவு பேரிழப்பாகும்.
ரோசய்யா மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.