கண்களுக்குப் புலப்படாத கொடிய எதிரி கொரோனாவை வீழ்த்த மருத்துவர்கள், காவல்துறையினர், துப்புறவுத் தொழிலாளர்கள் ஆகிய 3 தரப்பினரும் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவை தடுக்கும் வகையில் சென்னையின் எல்லைகள் முடக்கப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் கடுமையான சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் காவல்துறையினர்.
நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்களின் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்கக்கூடாது என்பதையும், சமூக விலக்கலை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா ? என்பதையும் உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.
நேற்று துவங்கிய போலீசாரின் வாகன சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அண்ணாசாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, திருவெற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி நெடுஞ்சாலை, போரூர் நெடுஞ்சாலை, வடபழனி 100 அடி சாலை என சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் தற்காலிக வாகன சோதனை சாவடிகள் அமைத்து சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
மிக அவசர தேவைகளை தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஒலி பெருக்கிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் அறிவிப்புகளை செய்கிறது போலீஸ். 144 தடை உத்தரவுகளை மீறி சாலைகளிலும் வீதிகளிலும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித் திரிந்தால் அவர்களிடம் இரக்கம் காட்டாமல் அவர்களை தொற்று நோய்ப்பரப்பும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸின் பாதிப்பு குறித்தும், பரவும் அதன் வேகத்தின் தீவிரம் குறித்தும், அதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்பது பற்றியும் மக்களிடம் எவ்வளவுதான் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் அது பற்றி அக்கறை காட்ட மறுக்கின்றனர். குறிப்பாக, பைக்கில் சுற்றும் ரோமியோக்களிடம் சுய பாதுகாப்பு என்பதே சிறிதும் இல்லை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும், ராஜிவ்காந்தி சாலையிலும் (பழைய மாமல்லபுரம் சாலை ) பைக் ரோமியாக்கள் சுற்றித் திருந்ததை பார்க்க முடிந்தது. 25-ந்தேதி மாலை 5 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சீறி வந்த 4 பைக்குகளில் 8 ரோமியோக்கள் இருந்தனர். திருவான்மியூரில் அவர்களை மடக்கி எச்சரித்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, உட்புறச்சாலைகளில் புகுந்து மீண்டும் கிழக்கு கடற்கரை சாலையை அவர்கள் அடைந்து மீண்டும் வேகமெடுத்துள்ளனர்.
அவர்களை கொட்டிவாக்கம் பகுதியில் மடக்கிய போலீசார், விசாரிக்க, திமிறாக பதில் சொல்லியிருக்கிறார்கள். அவர்களை நையப் புடைத்த போலீஸார், அவர்களது செல்ஃபோனை பிடுங்கி அவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு காய்ச்சி எடுத்தனர். பெற்றோர்கள் மன்னிப்பு கேட்டு கெஞ்சியதை அடுத்து பைக் ரோமியோக்களை எச்சரித்து திருப்பி அனுப்பியது போலீஸ். 21 நாள் முடக்கம் என்பதை கிழக்கு கடற்கரை ரிசார்ட்டுகளில் கூத்தடிக்கவும், பொழுதுப் போக்கு மையங்களில் கொண்டாடவும் விடப்பட்ட விடுமுறையாக கருதும் இன்றைய இளைஞர்கள் சுய ஒழுக்கம் இல்லாதவர்களாகவும் , தேசம் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் குறித்த கவலையுமில்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.