ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ் முதல்முறையாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 30 நாள் பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார்.
தந்தையின் உடல்நிலை குறைவு மற்றும் சகோதரியின் திருமணம் என இரண்டு முறை அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தன்னையும் பரோலில் விட வேண்டுமென ராபர்ட் பயாஸ் வைத்த கோரிக்கையை சிறைத்துறை ஏற்க மறுத்தது.
இதையடுத்து அவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ராபர்ட் பயாஸை அவரது மகன் கவிக்கோவின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 30 நாள் பரோலில் விட சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு ராபர்ட் பயாஸ் பரோலில் விடுவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்போடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராபர்ட் பயஸ் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.