சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரைக் கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தின் தரைத் தளத்தில் டிக்கெட் கவுண்ட்டர் செயல்பட்டு வருகிறது. இன்று (03/01/2022) காலை நீண்ட நேரமாகியும் அது திறக்கப்படாததால், சந்தேகப்பட்டு பயணிகள் உள்ளே சென்று பார்த்த போது, ஊழியர் கை மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் கிடந்திருக்கிறார். இதையடுத்து, பயணிகள் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு விரைந்த காவலர்கள், ஊழியரை மீட்டு விசாரித்தனர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டீக்காராம் என்பதும், நேற்று (02/01/2022) இரவு மூன்று பேர் டிக்கெட் கவுண்ட்டர் அறைக்கு உள்ளே வந்து, துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி கயிற்றால் கட்டி, 1,35,500 ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்திலும், குறிப்பாக, டிக்கெட் கவுண்ட்டர் அறையிலும் சிசிடிவி கேமரா இல்லாததால், கொள்ளையர்களைப் பிடிப்பது சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், எழும்பூர் ரயில்வே டி.எஸ்.பி.ஸ்ரீகாந்த் தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.