அதிமுக கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''அதிமுக அரசு கொடுத்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அடுத்து அதன் மூலமாக இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது மருத்துவக் கனவை நனவாக்கிய அரசு அதிமுக அரசு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 28 பேர் 7.5% இட ஒதுக்கீடு காரணமாக இன்று மருத்துவர் ஆகக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். ஒரே பள்ளியில் ஐந்து பேர் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். நீர் பற்றாக்குறை மாநிலம் நமது மாநிலம். எனவே நீரை சேமித்து விவசாயத்திற்கு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற எண்ணினார்,
அவருடைய எண்ணத்தை நான் முதலமைச்சராக இருந்த பொழுது நிறைவேற்றிக் கொடுத்தோம். மேட்டூர் அணை நிரம்பி உபரி நீராக வெளியேறுகின்ற பொழுது அந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. அப்படி கடலில் கலக்கின்ற நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நிரப்புகின்ற பொழுது நிலத்தடி நீர் உயர்ந்து வேளாண்மை க்கு தேவையான நீர் கிடைக்கும். குடிப்பதற்கான நீர் கிடைக்கும். இந்த வறண்ட பகுதியில் இருக்கின்ற தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு நீண்ட கால திட்டத்தையும் நாங்கள் உருவாக்கினோம். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டிருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீண்டும் ஜெயலலிதா அரசு அமையும் பொழுது இந்தத் திட்டம் தொடரும்.
எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை எனத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நானும் நாள்தோறும் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுவிட்டது''என்றார்.