விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்கல்சூளை பாதுகாப்புப் பணிக்கு சக்திவேலும் அவரது மனைவியும் சென்றுவிட்டனர். அவரது வீட்டுக்குள் அவர்களது மகன் சசிகுமார் (25), மருமகள் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகிய மூவரும் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
செங்கல் சூளைக்குச் சென்ற தனது தாய் தந்தையர் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சசிகுமார் முன்பக்கக் கதவைப் பூட்டாமல் சாத்திவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கியுள்ளார். அதிகாலை, 4 மணி அளவில் சசிகுமார் மட்டும் இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது வெறுமனே சாத்தியிருந்த கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது செல்ஃபோன் மூலம் பக்கத்துத் தெருவில் இருந்த தனது நண்பர் ஒருவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர் வந்து கதவைத் திறந்துவிட்டுள்ளார். இதன்பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த இரும்பு பீரோ மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேடிப் பார்த்தும் காணவில்லை. பீரோவைக் கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதன்பிறகு கிராமமக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு வயல்வெளியில் சசிக்குமாரின் வீட்டு பீரோ உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சசிகுமார் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து உடைக்கப்பட்டுக் கிடந்த பீரோவை ஆய்வு செய்துள்ளனர். அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் கதவு திறந்திருந்ததால் வீட்டுக்குள் சுலபமாக புகுந்த கொள்ளையர்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து பீரோவை உடைத்தால் சத்தம் வரும் அதனால் அக்கம்பக்கத்தினர் குடும்பத்தினர் எச்சரிக்கை அடைந்து விடுவார்கள் என்பதற்காக பீரோவை மட்டும் வீட்டை விட்டு வெளியே தூக்கிச் சென்று நகை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளை போன நகை பணம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 11 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு வயல் வெளியில் கிடந்த பீரோவைக் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைச் சேகரித்துள்ளனர்.
போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்துவருகின்றனர். இப்போதெல்லாம் கொள்ளையடிக்க வீடுகளுக்குள் நுழையும் கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக் கொண்டு இருப்பவர்கள் வெளியே வராதபடி வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டு விட்டு வேண்டியவற்றை வெளியே கொண்டுச் சென்று சாவகாசமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றனர். இவர்கள் புதுமாதிரியான கொள்ளையர்களாகத் தெரியவருகிறது.
உதாரணமாக சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் இதேபோன்று இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வீட்டுக்குள் கொள்ளையர்கள் பீரோவைத் தூக்கிச் சென்று உடைத்து 100 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதிலும் பீரோக்களை தூக்கிச்செல்லும் இதுபோன்ற சம்பவம் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காவல்துறையோ, குற்றவாளிகளைத் தேடி வருவதாகக் கூறியபடியே உள்ளனர்.