
திருப்பூரில் திருடிய வீட்டிலேயே செல்ஃபோனை வைத்துவிட்டு வந்ததால் கொள்ளையன் சிக்கிய சம்பம் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்படாமலே பீரோவில் இருந்த முக்கால் பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பொன்ராஜ், அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் திருட்டு நடந்த வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது பொன்ராஜின் வீட்டில் புதிய செல்ஃபோன் ஒன்று கிடந்துள்ளது. அதனைக் கைப்பற்றி, போலீசார் மேற்கொண்ட ஆய்வில் அது பொன்ராஜின் நண்பரான நாகராஜ் என்பவரின் செல்ஃபோன் என தெரியவந்தது.
அதனையடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், நண்பர் பொன்ராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வைக்கும் இடத்தைத் தெரிந்துகொண்ட நாகராஜ், பொன்ராஜ் குடும்பத்துடன் வெளியே கிளம்பியபோது வீட்டைத் திறந்து நகை திருடியது தெரியவந்தது. மேலும் செல்ஃபோனை மறந்து உள்ளேயே வைத்துவிட்டதால் வசமாக சிக்கிக்கொண்டார் நாகராஜ்.