
இந்தியாவில் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஆண்டுதோறும் சராசரியாக 4.50 லட்சம் சாலை விபத்துகள் நடப்பதும், அவற்றால் 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், சாலை விபத்துகளைத் தவிர்ப்பது, போக்குவரத்து விதிகளை மதித்தலின் அவசியம், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
நடப்பு ஆண்டில், ஜனவரி மாதம் முழுவதுமே சாலை பாதுகாப்பு விழாவாக கொண்டாடப்பட்டது. நிறைவு பகுதியாக, தமிழ்ச்சாலை பண்பாட்டு இயக்கம் சார்பில் ஜலகண்டாபுரம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா, சாலை விபத்துகள் குறித்த பல்வேறு தகவல்களைக் கூறினார்.
''உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4.50 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில், 1.50 லட்சம் பேர் பலியாகின்றனர். 4.50 லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மரணங்கள், விபத்தினால் ஏற்பட்ட கொடுங்காயங்கள் என 10 லட்சம் வழக்குகளுக்கு மேல் பதிவாகின்றன. இந்த வழக்குகளுக்காக 2 கோடி மனித உழைப்புக்கான நேரம் செலவிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 1.47 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், அதிவேகம் காரணமாக 73.5 சதவீத விபத்துகள் நடக்கின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் 3.5 சதவீத விபத்துகள் நடக்கின்றன. தவறான பாதையில் ஓட்டுவதால் 5.1 சதவீத விபத்துகளும், சிவப்பு விளக்கை மதிக்காமல் வண்டியை இயக்குவதால் 6 சதவீத விபத்துகளும், செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஓட்டுவதால் 2.6 சதவீத விபத்துகளும் ஏற்படுகின்றன. இவை மட்டுமின்றி, இதர வழிகளில் 14.7 சதவீத விபத்துகள் நடக்கின்றன.
ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டவரின் வலியும், வேதனையும் பிறரால் எளிதில் உணராத முடியாத வகையிலேயே இருக்கிறது. உயிர் பலி மற்றும் உடல் உறுப்புகள் சேதாரத்தால் குடும்பத்தின் வாழ்வாதாரம் மொத்தமாக பறிபோய் விடுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு விபத்துக்குப் பின்னாலும் கண்ணுக்குத் தெரியாத பெரும் சோகங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.
விபத்து அபாயங்களைத் தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சாலை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதசாரிளுக்கென தனி நடைபாதை அமைக்க வேண்டும். சாலை பாதுகாப்பு படை உருவாக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கென தனி பாதை ஏற்படுத்த வேண்டும்,'' என்கிறார் தம்பையா.