சுந்தர்ராஜுவுக்கும் முருகேசனுக்கும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாது. வழக்கம் போலவே, பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மிகவும் ‘ரிஸ்க்’ ஆன இந்தத் தொழிலை வயிற்றுப் பிழைப்புக்காகப் பார்த்து வந்தனர். அத்தொழில் அதன் வீரியத்தை நேற்று (30-5-2019) காட்டிவிட்டது. அதனால், அவ்விருவரும் பட்டாசு வெடி விபத்தில் சிக்கி, உடல் சிதறி உயிரைவிட்டனர்.
சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான நயா கார்னேசன் பட்டாசு ஆலை, சாத்தூர் தாலுகா - துலுக்கன்குறிச்சியில் இயங்கி வருகிறது. இங்கு 70-க்கும் மேற்பட்ட அறைகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மையார்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜுவும், துலுக்கன்குறிச்சியைச் சேர்ந்த முருகேசனும் 69-ஆம் நம்பர் அறையில், அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான மருந்தினைக் கலக்கும் பணியைச் செய்தனர். அப்போது, உராய்வின் காரணமாக திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. அதனால், இருவரும் உடல் கருகி, வெவ்வேறு இடங்களில் உடல் சிதறி, இறந்து போனார்கள்.
வழக்கம்போல், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மேலும் தீயைப் பரவவிடாமல் அணைத்தனர். வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, பட்டாசு ஆலை மேலாளர் மற்றும் போர்மேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.