Skip to main content

சொத்தை முழுவதும் இழந்த தொழிலதிபர்கள் மற்றும் சின்னத்திரை நடிகை... அதிர வைத்த காரணம்... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

நடுத்தர குடும்பத்தினர் முதல் பெரும் செல்வந்தர் வரைக்கும் காசினோ சூதாட்டத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து போகிறார்கள்.

அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சட்ட அனுமதியுடன் சூதாட்டம் நடந்து வருகிறது. இந்தியாவில் மகாபாரத காலத்தில் இருந்தே சூதாட்டம் இருந்து வருகிறது. கோவா, டாமன், சிக்கிம் ஆகிய சில பகுதிகளில் மட்டுமே சட்ட அனுமதி இருந்தாலும் மற்ற பகுதிகளில் சட்ட அனுமதி இல்லாமலேயே சூதாட்டம் நடந்து வருகிறது. இப்படி சட்ட அனுமதி இல்லாமல் நடக்கின்ற சூதாட்டங்கள் மூலமாக வரும் பணம் அனைத்தும் கறுப்புப் பணமாக மாறிவிடுவதால், சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்குவது பற்றி ஆலோசிக்குமாறு உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இந்த சூதாட்டங்களால் பல குடும்பங்கள் வீதிக்கு வரும் அவலமும் தொடர்கின்றன.
 

actress



சென்னையில் மனமகிழ்மன்றங்கள் என்ற பெயரில் சட்டவிரோத காசினோ சூதாட்ட கிளப்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை அம்பத்தூரில் "டர்னிங் கம்பெனி'யை நடத்தி வந்த தொழில் அதிபர் ராஜாராம், தன் சொத்தையெல்லாம் அடமானம் வைத்து இழந்தது இந்த காசினோ சூதாட்டத்தினால்தான். ஆந்திர மாநிலம் வேங்கடகிரியை சேர்ந்த தொழில் அதிபர் 60 லட்சம் ரூபாயை இழந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதற்கும் காசினோதான் காரணம்.

சின்னத்திரையை கலக்கிய நாயகி ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டபோது, அவரின் இந்த நிலைமைக்கு காரணமும் காசினோதான் காரணம் என்றும் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தில், தன் காதலர் சின்னத்திரை நாயகன் ஈஸ்வர் தன்னிடம் இருந்து சுமார் முப்பது லட்சம் ரூபாய்வரை பணத்தை பறித்ததாகவும், அதை ஆற்காடுசாலை யில் உள்ள ஒரு காசினோ சூதாட்டகிளப்பில் இழந்ததாகவும், சூதாட்டத்தில் ஈடுபடாமல் இருந்திருந்தால் தங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்றும் கூறினார். இது போல இன்னும் பல சின்னத்திரை பிரபலங்களும், வெள்ளித்திரை பிரபலங்களும் காசினோவால் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில் இயங்கிவந்த சூதாட்ட கிளப்பில் தகராறு முற்றி போலீசுக்கு தெரியவர, உடனே அங்கு போலீசார் வருவதை பார்த்து தப்பமுயன்ற வாலிபர் மாடியில் இருந்து விழுந்து பலியானார்.


 

actress

சட்டவிரோதமாக நடக்கும் இந்த சூதாட்டங்களில் போலீசாரும் பங்கேற்பதுதான் கொடுமை. கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னை சூளையில், ரமேஷ் என்பவர் நடத்திவந்த கிளப்பில் வேப்பேரி போலீசார் நடத்திய சோதனையில், சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த ஆறு பேரை கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்களில் முருகேசன் என்பவர் காவல் உதவி ஆய்வாளர் என்பதும், ஆல்பர்ட் என்பவர் ஓய்வு பெற்ற காவலர் என்பதும் தெரிய வந்தது. ரெட்டேரி, மாதவரம், கொளத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் காசினோ சூதாட்டகிளப்பின் சூப்பவைசர் சண்முகம் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரின் தற்கொலைக்கான பின்னணி இதுவரையிலும் வெளிவராமல் மர்மமாகவே தொடர்ந்தாலும், சூதாட்டம் விவகாரம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
 

சென்னையில் இப்படி என்றால், அண்டை மாநிலமான ஆந்திராவில், ஜெகன்மோகன்ரெட்டி ஆட்சிக்கு வந்ததும் அம்மாநிலத்தில் செயல்பட்டுவந்த அனைத்து காசினோ சூதாட்ட கிளப்புகளையும், அடியோடு ஒழித்திருக்கிறார். இதனால் அங்கிருந்த காசினோ சூதாட்ட கிளப்புகள் எல்லாம் இடம்பெயர்ந்து தமிழகத்தில் செயல்பட துவங்கிவிட்டன.

தமிழக-ஆந்திர எல்லைகளான பள்ளிப்பட்டு, திருத்தணி, ஊத்துக்கோட்டையில் என பல சூதாட்டகிளப்புகள் முளைத்திருக்கின்றன. ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம் பகுதியில் ஷேக்முஸ்தபா என்பவருக்கு சொந்தமான ’ஊத்துக்கோட்டை ரீகிரியேசன் சொசைட்டி’ என்ற பெயரிலும், ’மனமகிழ்மன்றம்’ என்ற பெயரிலும் நான்குமாதமாக கிளப் செயல்பட்டு வருகிறது.

 

 

டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. என ரேங்குக்கு ஏற்றாற்போல கட்டிங் கொடுத்து சூதாட்டகிளப்பை நடத்திவந்துள்ளார். தமிழக, ஆந்திர எல்லை என்பதால், ஆந்திராவில் இருந்து செல்வந்தர்கள் வந்து குவிந்துள்ளனர். சென்னையில் பல சூதாட்டகிளப்புகளை நடத்திவரும் பிரபல அ.தி.மு.க. பிரமுகர் காதுக்கு இதுபோக... அந்த கிளப்பையும், கைப்பற்ற நினைத்துள்ளார். உடனே காவல்துறையினரை தூண்டிவிட, டி.எஸ்.பி. சந்திரஹாசன் டீம் தலைமையிலான காவல்துறை உதவியுடன் கிளப்பில் அதிரடி ரெய்டு நடத்தியது. இதில், 13 கார்களும், பல ஆயிரம் மதிப்புள்ள உயர்ரக மதுபாட்டில்களும், பல லட்சம் ரூபாய் சூதாட்டத்தில் ஈடுபட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். கிளப்பை நடத்திவந்த ஷேக்கோ, "பல லட்சம் கட்டிங் கொடுத்தும் என் பிஸினசை நாசம் செய்துவிட்டார்களே'' என்று புலம்பிவருகிறார்.


இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெயர் கூறவிரும்பாதவர், "சென்னையை பொறுத்தவரை காசினோ சூதாட்ட கிளப் நடத்துவது தென் சென்னையை சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய புள்ளிதான். இவர் வீட்டின் பின்புறமே சூதாட்டம் நடக்கிறது. அதேபோல வடபழனி ஆற்காடுசாலை, சம்பூர்ணம் அவென்யூவில் சூதாட்டகிளப் விடிய விடிய நடக்கிறது. நாள் முழுவதும் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை பல ஆட்டோ டிரைவர்கள் இங்கே வந்து தான் அழிப்பார்கள். விடியவிடிய இந்த கிளப் செயல்படுவதால் மொத்தபணமும் காலி ஆகும் வரை அங்கேயே இருப்பார்கள். பாரில் கூட இரவு முழுக்க சரக்கு (மது) கிடைக்காது. ஆனால் இங்கு கிடைப்பதால் குஷிதான்.

இந்த கிளப்புகள் மீது எத்தனை புகார் வந்தாலும் நடவடிக்கை புகார் கொடுத்தவர் மீதே பாயும் என்பதால் யாரும் புகார் செய்ய முன் வருவதில்லை. மறைமுகமாக செயல்பட்டு வருகிறது. காசினோ சூதாட்ட கிளப்புகளை பொறுத்தவரை 500 ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை கட்டி விளையாடப்படுகிறது. இந்த கிளப்பால் பல குடும்பங்கள் அழிந்துவருகின்றன. இதை தடுக்காவிட்டால் மேலும் பல குடும்பங்கள் நடு வீதிக்கு வந்துவிடும் அவலம் ஏற்படும். சில காசினோ சூதாட்டகிளப்பில் மது மட்டுமல்ல; மாதுவும் கிடைக்கிறது. ராயப்பேட்டை ஜி.பி. ரோட்டில் எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே செயல்பட்டுவரும் கிளப்பில் ஆபாசநடனத்தில் மூழ்கி பணத்தை இழந்தவர்கள் பலர். சென்னையை பொறுத்தவரை சட்டவிரோத காசினோ சூதாட்ட கிளப் தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி மற்றும் அம்பத்தூர் காவல்நிலைய அருகிலே ஒரு கிளப் செயல்பட்டு வருகிறது. தென்சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் அதிக கிளப்புகள் செயல்பட்டுவருகின்றன.

சென்னை மேற்கு காவல் எல்லையான அம்பத்தூர், ரெட்டேரி, கொளத்தூர், செங்குன்றம், மாதவரம் போன்ற பகுதி யிலும், வடசென்னை காவல் எல்லைப் பகுதியிலும் செயல்பட்டு வருகின்றன. சென்னை கிழக்கு இணை ஆணையர் சுதாகர் தனது காவல் எல்லையில் இருந்த கிளப்புகள் மீது நடவடிக்கை எடுத்தார். அதனால் பல நெருக்கடிகளுக்கும் அவர் ஆளானார்.

உயர் அதிகாரிகள் கண்டிப்பாக இருந்தாலும் சில இடங்களில் கீழ்மட்ட அதிகாரிகள் துணையுடன் சில கிளப்புகள் செயல்பட்டு வருகின்றன.

காவல்துறையும் அவ்வப்போது காசினோ சூதாட்ட கிளப்புகள் மீது நடவடிக்கை எடுத்துதான் வருகிறது. 2017-ஆம் ஆண்டு மட்டும் 178 வழக்கு பதியப்பட்டு 305 பேர் கைது செய்யப்பட்டனர். 2018-ஆம் ஆண்டு 69 வழக்கு பதியப்பட்டு 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 53 வழக்கு பதியப்பட்டு 98 பேர் கைது செய்யப்பட்டனர். சூதாட்ட வழக்கில் கைது செய்யப்படுவர்கள் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிடுவதால், கைது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
 

 

சென்னை மாநகர காவல் வடக்கு கூடுதல் ஆணையர் தினகரனிடம் காசினோ விவகாரம் குறித்து பேசியபோது, "என் காவல் எல்லையில் இதுவரை எந்த ஒரு சூதாட்ட கிளப்பும் செயல்படுவதாக தெரியவில்லை. அப்படி செயல்பட்டு வந்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

சென்னை மாநகர காவல் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேமானந்த சின்ஹாவிடம் இந்த விவகாரம் குறித்து கேட்ட போது, "இதுபோன்ற கிளப்புகள் செயல்படுவது கவனத்திற்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பட்டினப்பாக்கம் காவல் எல்லையில் இது போல செயல்பட்டு வந்த கிளப் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி போன்ற பகுதிகளில் செயல்படுவதாக இருந்தால் அதன் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார். தாமரைக்குப்பம் ரெய்டு தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யான அரவிந்தனிடம் விசாரிக்க பலமுறை தொடர்புகொண்டபோதும் அவர் போனை எடுக்கவே இல்லை.

 

சார்ந்த செய்திகள்