
ஆத்தூரில், லஞ்ச வழக்கில் கைதான முத்திரைத்தாள் பிரிவு வருவாய் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் முத்திரைத்தாள் தனி வட்டாட்சியர் அலுவலகம் இயங்கிவருகிறது. இங்கு வருவாய் ஆய்வாளராக அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவர் பணியாற்றிவருகிறார்.
கடந்த மாதம் ஆத்தூரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு குறித்து, முத்திரைத்தாள் தனி துணை ஆட்சியருக்குப் பரிந்துரை செய்வதற்காக செந்தில்குமாரை அணுகினார். அதற்கு அவர், துணை ஆட்சியருக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமானால் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர், இதுபற்றி சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
அதையடுத்து, லஞ்ச ஒழிப்புப்பிரிவினர் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடிப்பதற்காக வகுத்துக் கொடுத்த திட்டப்படி, புகார்தாரரிடம் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட 35 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்துடன் சென்ற புகார்தாரர், கடந்த ஜூன் 23ஆம் தேதி செந்தில்குமார் வீட்டுக்கு நேரில் சென்று லஞ்சத்தைக் கொடுத்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர், செந்தில்குமாரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
லஞ்ச வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் செந்தில்குமாரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா உத்தரவிட்டுள்ளார்.