நேற்று முன்தினம் சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தனித்து நிற்பது தொடர்பான பேச்சுக்கு வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் எச்.ராஜா பதிலளித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரியில் நட்டா சொன்னது தான் கட்சியின் முடிவு. ஒரு முடிவை மாற்ற வேண்டும் என்றால் கூட அவர்கள் தான் ஆதாரம். நாங்கள் செய்ய முடியாது. மாநில தலைவரோ, மாநில நிர்வாகிகள் குழுவினரோ முடிவை மாற்ற முடியாது, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகள் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அமைச்சர்கள் நடந்து கொள்கின்ற விதங்கள் தொண்டர்களை கற்களை கொண்டு அடிப்பது, மண்டையில் அடிப்பது எந்த அளவிற்கு போய் இருக்கிறது என்றால் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவை வீட்டிலேயே சென்று தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனை தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. உடைந்த பானையான திமுக தமிழகத்தில் ஒரு கட்சியாக இணை இருக்காது. தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்''என்றார்.