காங்கிரஸில் இருந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் விஜயதாரணி நேற்று பாஜகவில் இணைந்தார். அவர் பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவிகளில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கொடுத்திருந்தார். அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்கியதோடு, கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் நெல்லையில் செய்தியார்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, 'விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவில் சேர்ந்து விட்டார். அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று சொல்லி அவர் இணைய வழியில் ஒரு தகவலை சட்டப்பேரவை தலைவருக்கும், சட்டப் பேரவையினுடைய முதன்மைச் செயலருக்கும் அனுப்பி இருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கைப்பட எழுதி இணைய வழியில் என்னுடைய கவனத்திற்கும், சட்டப்பேரவையினுடைய முதன்மை செயலாளர் கவனத்திற்கு அனுப்பினார். இரண்டு செய்திகளையும் என்னுடைய கவனத்திற்கு முதன்மைச் செயலாளர் அனுப்பி வைத்தார். அதை நான் பரிசீலனை செய்து பார்த்ததில் விஜயதாரணி முறைப்படி தன்னுடைய கைப்பட பதவி விலகல் கடிதத்தை கொடுத்திருப்பதை தெரிந்து கொண்டேன். மேலும் இன்று காலை தொலைபேசியில் என்னை அழைத்து, 'நான் தான் அதை என் கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டேன். ஆகவே காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்' என்பதை தொலைபேசி வாயிலாகவும் தெரிவித்துவிட்டார். அதன்படி விஜயதாரணியின் பதவி விலகலை நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்றார்.