கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து நேற்று முன்தினம் சென்னை எழும்பூருக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான இரயில்வே பாலம் முழுவதும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாகச் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரயிலில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் உணவு, குடிநீர் இன்றி அவதியடைந்தனர். இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை கருதி நிறுத்தி வைத்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
அதே சமயம் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக ஆய்வு செய்தார். அப்போது தொலைப்பேசி வாயிலாக அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தார். நிலைமையை ஆய்வு செய்து, மீட்புப் பணியை துரிதப்படுத்த தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். அப்போது மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உடன் இருந்தார்.
இந்நிலையில் வெள்ளத்தால் 3 நாட்கள் ரயிலில் சிக்கியிருந்த ரயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேருந்துகள் மூலம் 400க்கும் மேற்பட்ட பயணிகள் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து மற்றொரு ரயில் மூலம் பயணிகள் மதுரை செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.