அரிமளம் அரசுப் பள்ளியில் தொழிற்கல்வி
பாடப்பிரிவுகளை நீக்குவதா?மாணவர்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரே நேரத்தில் மூன்று தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதைக் கண்டிது புதுக்கோட்டையில் வாலிபர், மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 பாடப்பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதில் மாணவர்கள் விரும்பிப்படித்த தொழிற்கல்வி பாடங்களான மூன்று பிரிவுகளை ஒரே கல்வியாண்டில் (2017-18) நீக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு ஒவ்வொரு மாணவரையும் கட்டாயப்படுத்தி ரூ.200 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வாலிபர் சங்கத்தினரின் போராட்டத்தால் திரும்ப ஒப்படைக்கப்பட்ட தொகையைக்கூட மீண்டும் மிரட்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நன்கொடை என்ற பெயரிலும் பெற்றோர் ஆசிரியர்க கழக நிர்வாகிகளைப் பயன்படுத்தி ரூ.250 முதல் ரூ.1750 வரை மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசு உத்தரவை மீறி நடைபெறும் இத்தகைய வசூல் வேட்டையைத் தடுத்து நிறுத்த வேண்டும். நீக்கப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, செவ்வாய்க்கிழமையன்று வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் ஜி.பன்னீர்செல்வம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.விக்கி ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு முதன்மைக் கல்வி அலுலவர் அலுவலகத்திற்கு வந்தனர். சங்கத்தினரை மறித்த போலீசார் முதன்மைக் கல்வி அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகத் தெரிவித்தார்.
அதன்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மூன்று பாடப்பிரிவுகளில் மின் இயந்திரங்களும் சாதனங்களும் மற்றும் வேளாண் செயல்முறைகள் ஆகிய இரண்டு பாடத்திட்டங்களை வரும் கல்வி ஆண்டிலிருந்து செயல்படுத்துவதாகவும் பணம் வசூல் செய்துள்ளது தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் முதன்மைக் கல்வி அலுவலர் உறுதியளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன், துணைத் தலைவர்கள் ஆர்.சோலையப்பன், நகரச் செயலாளர் அருண், அர்ச்சனா, ராஜா, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் குமாரவேலு மற்றும் நிர்வாகிகள் சங்கர், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- பகத்சிங்