இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார சிக்கல் காரணமாக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது என தெரிவித்திருந்த தமிழக முதல்வர், '40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் தமிழகம் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இதற்காக நன்கொடை வழங்க வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கைக்கு பொருட்களை அனுப்ப நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இலங்கைக்கு அனுப்ப நிவாரண பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது. நிவாரணப்பொருட்கள் அடங்கிய பை மீது 'தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அன்புடன்' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையைச் சேர்ந்த ஜெசிந்தா லாசரஸ், பால் உற்பத்தியாளர்கள் பெடரேஷன் அமைப்பை சார்ந்த சுப்பையன் ஐ.ஏ.எஸ், உணவுப்பொருள் வழங்கல் துறையின் ஆணையராக இருக்கக்கூடிய பிரபாகர் ஐ.ஏ.எஸ், மருந்து கொள்முதல் செய்யக்கூடிய நிறுவனத்தின் இயக்குநர் என நான்கு பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிவாரண பொருட்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 22 தேதிக்கு பிறகு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.