காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து விபத்தான சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு வெடிக்கும் பொருளும் கடந்த 26 ஆம் தேதி அதே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடிகுண்டை வெடிக்கவைத்து செயலிழக்க வைக்கும் பணியில் தற்போது சென்னை வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காஞ்சிபுரம் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோவில் கோவில் குளத்தை ஒட்டிய பகுதியில் பிறந்தநாள் கொண்டாட சென்ற 6 இளைஞர்கள் கண்ணில்பட்ட மரப்பெட்டியை கரை பகுதியில் அமர்ந்து திறக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த பெட்டி வெடித்து சிதறியது. அதிலிருந்த பால்ரஸ்கள், சில இரும்பு துகள்கள் போன்றவை அருகிலிருந்த கோயில் சுவற்றின் மீதுபட்டு கோவில் சுவர்களில் காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சூர்யா, திலீபன் என்ற இருவர் உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்த நாளே அதேபகுதியில் இன்னொரு வெடிக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொருளை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்புடன் வெடிக்க வைத்து செயலிழக்க வைக்க முடிவெடுத்த நிலையில் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுடன் இன்று வெடிக்கவைப்பதற்கான பணியில் இறங்கியுள்ளனர்.
சுமார் இரண்டு அடிக்கு இரண்டு அடி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வெடிக்கவைக்க முயற்சி செய்துவருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அந்த வெடிகுண்டு வெடிக்க வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.