கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது சீர்பாத நல்லூர். இந்த ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் எழிலரசன். இவரும் இவரது நண்பர் கொள்ளியூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முருகன் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பன். அதனடிப்படையில் கடந்த 18ஆம் தேதி இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது விபத்து ஏற்பட்டது என்றும் அதில் எழிலரசன் கீழே விழுந்து பலத்த அடிபட்டதாகக் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவரது உறவினர்கள் எழிலரசனை உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆனால் அவரது இறப்பிற்கு விபத்து காரணம் அல்ல அவரது இறப்பில் மர்மம் உள்ளது எனவே உரிய விசாரணை வேண்டும் என்றனர் உறவினர்கள். உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என கூறி எழிலரசன் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் பகண்டை கூட்டு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
மறியல் நடைபெற்ற இடத்திற்கு திருக்கோவிலூர் பொறுப்பு டி.எஸ்.பி திருவேணி சாலை மறியல் செய்த உயிரிழந்த எழிலரச உறவினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர். எழிலரசன் தாயார் முத்தம்மாள் அளித்த புகாரின் பேரில் பகண்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எழிலரசன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.