புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு ஜீன் 9 ந் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். அதன் பிறகு புதுக்கோட்டை நகரில் தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்ட 130 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு வழியின்றி நீண்ட தூரம் செல்ல வேண்டியும் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா. அதனால் பழைய மருத்துவமனைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அனைத்துக் கட்சிகளும் போராடியும் பலனில்லை.
இந்த நிலையில் தான் மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் சென்று வர நகரப் பேருந்துகளை இயக்கினார்கள். ஆனால் நுழைவாயில் பகுதியில் தரையில் மிதியடி சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் அரசுப் பேருந்துகள் வேகமாக சென்று திரும்ப முடியாமல் வழுக்கிக் கொண்டு நுழைவாயில் தூண்களில் மோதி இதுவரை 3 விபத்துகளில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அதே மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் தரை மிதியடி கற்களை மாற்றி தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதை செய்யவில்லை.
மாறாக நுழைவாயில் அருகே வாகனங்களில் வேகத்தை குறைப்பதாக நினைத்து வியாழக்கிழமை நள்ளிரவில் 2 அடி உயரத்திற்கு சிமென்ட் கான்கிரீட் மூலம் வேகத்தடை அமைத்துள்ளனர். வேகத்தடை அமைத்து சில மணி நேரத்திற்குள் நோயாளிகளை பார்க்க மோட்டார் சைக்கிள்களில் சென்ற உறவினர்கள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து சுமார் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோயாளிகளை குனமாக்க தான் மருத்துவமனை ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் தான் நல்லா வருபவர்களையும் மண்டையை உடைத்து நோயாளிகளாக உள்ளே அனுப்பி சிகிச்சை கொடுக்கிறார்கள்.
மேலும் ஆட்டோக்கள், பேருந்துகள் கூட அந்த வேகத்தடையில் ஏறிச் செல்ல முடியாமல் அடிப்பகுதியை உடைத்துக் கொண்டு சென்றார்கள். இந்த சம்பவங்களுக்கு பிறகு வேகத்தடையை உடைக்க திட்டமிட்டுள்ளார்களாம். இத்தனை செலவுகள் செய்வதற்கு தரைமிதியடி கற்களை மாற்றி தார் சாலை அமைத்துவிட்டால் விபத்துகளை தடுக்கலாம் தானே..?