Skip to main content

திருமணங்களை பதிவு செய்வதில் புதிய சட்ட திருத்தம்! அரசுக்கு வருவாயை அதிகரிக்க வழிவகை!!!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

 Registration Marriage - Law Amendment - TN Govt

 

2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் தமிழகத்தில் எங்கு திருமணம் நடந்தாலும் எப்படிப்பட்ட முறையில் திருமணம் நடைபெற்று இருந்தாலும் அனைத்து திருமணங்களையும் மத பாகுபாடு இன்றி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகம் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவுக்கட்டணம் 200 ரூபாய். அரசு சலுகைகள், வேலைவாய்ப்புகள் போன்ற அனைத்திற்கும் இந்த பதிவுகள்தான் செல்லும் என்று அப்போதைய அரசு உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் இதுபோன்ற திருமணப் பதிவுகள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை திருமண பதிவுகள் மூலம் மூன்று கோடியே 74 லட்சம் ரூபாய் பதிவுத் துறைக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதுவே குறைவு என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து உள்துறை செயலாளர் பிரபாகர் இதில் புதிதாக திருத்தம் செய்து ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் "தமிழ்நாடு திருமண பதிவு சட்டம் 2009 விதிகளில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சமயகுரு என்பவர் அல்லது வழக்காறு அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள சட்டம் எதனின் படியும் திருமணத்தை நடத்தி வைப்பவர் ஆவார் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. 

இனிமேல் திருமண பதிவிற்கான படிவத்தினை மனுதாரர்கள் சார்பதிவாளரிடம் நேரில் தாக்கல் செய்ய இயலாத நிலையில் நேரில் வர முடியாத நிலை ஏற்பட்டாலும் எழுத்து மூலமாக காரணத்தை தெரிவித்து அதனுடன் திருமணம் நடந்ததற்கான அத்தாட்சி செய்யப்பட்ட உறுதிமொழியையும் இணைத்து பதிவாளருக்கு அனுப்பிய பின்னர் பதிவாளர் மனுதாரர்கள் நேரில் வர இயலாத சூழ்நிலைகளை பதிவு செய்துகொண்டு அவர்களை திருமண பதிவிற்கான குறிப்பாணை படிவத்தினை ஒப்புதலுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க அனுமதிக்கப்படுகிறது.

 

 


புதிய துணை விதியின்படி திருமணம் நடந்த நாளிலிருந்து 150 நாட்கள் கடந்த பின்னர் மனுதாரர் சார் பதிவாளருக்கு குறிப்பாணை படிவம் அளிக்கப்படும் அல்லது அனுப்பப்படும் நேர்வுகளில் கட்டணமாக 1,150 ரூபாய் கட்டணம் செலுத்துவதற்கு திருத்தங்கள் மூலம் வழி செய்யப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளார். 

இனிமேல் 90 நாட்களில் திருமண பதிவு கட்டாயம் என்பது மாற்றப்பட்டு, 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் பதிவு திருமணம் மூலம் அரசுக்கு வருவாயை அதிகரிக்க செய்யும் வகையில் திருத்தம் செய்துள்ளதாக தெரியவருகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்