திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கல்வி மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை, ரெட்டியார்சத்திரம் ஆகிய நான்கு ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேடசந்தூர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட நாகாகோணானூரில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ராதா ராணி, பூதிபுரம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் கருக்காம்பட்டி அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துச்செல்வி ஆகிய மூன்று தலைமை ஆசிரியைகள் வட்டார கல்வி அதிகாரி அருண்குமார் மீது பாலியல் புகார் ஒன்றை வேடசந்தூர் கல்வி மாவட்ட அதிகாரியிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமும் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில் ஒரு தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்களை அண்ணா என்று உறவு முறை வைத்து அழைக்கிறாய் அவர்கள் எனக்கு மைத்துனர்கள். அப்போ நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்றும், அதே நேரத்தில் அந்த தலைமை ஆசிரியையின் தோழியையும் அவரது கணவரையும் தொடர்புப்படுத்தி தவறான பார்வையில் பேசப்பட்டு வருவதாகவும் மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க வரும் போதெல்லாம் தவறான பார்வையில் பார்த்து வருவதாக ஒரு தலைமை ஆசிரியை புகார் கொடுத்துள்ளார்.
அதுபோல் மற்றொரு தலைமை ஆசிரியையிடம் இரட்டை அர்த்தத்துடன், கணவர் இறந்து தனியாக எப்படி இருக்கிறீர்கள் எனக்கூறி மனதைப் புண்படும்படி பேசி இருக்கிறார். அதேபோல் இன்னொரு தலைமை ஆசிரியை மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்க அலுவலகம் சென்றபோது, இருக்கையில் அமரச் சொல்லி டீச்சர் நீங்கள்லாம் எனக்கு எட்டாக்கனியாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்தும் எழுத்தில் சொல்லமுடியாத நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும், ஆபாசப் படங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வருவதால் மிகுந்த மன உளைச்சலிலிருந்து வருவதாக வேதனையுடன் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த குற்றச்சாட்டு பற்றி வட்டார கல்வி அதிகாரி அருண்குமாரிடம் கேட்டபோது, ''பாலியல் புகார் கொடுத்த மூன்று பள்ளி தலைமை ஆசிரியைகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து அவர்களிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டதன் அடிப்படையில் என் மீது பொய்யான பாலியல் புகார் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்'' என்று கூறினார்.
இதுபற்றி வேடசந்தூர் மாவட்ட கல்வி அதிகாரி கீதாவிடம் கேட்டபோது, ''மூன்று பெண்கள் உள்பட ஒரு மாற்றுத்திறனாளி ஆணும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். இது சம்பந்தமான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் விசாரணையை முடித்து முதன்மைக் கல்வி அலுவலகத்திற்குப் புகார் பற்றிய விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து துறை ரீதியான உண்மைத் தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.
இந்நிலையில் தான் வட்டார கல்வி அலுவலர் அருணிடம் விசாரணையை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கருப்புசாமி சம்பவம் நடைபெற்றது உண்மை என அறிந்து அவரை துறை ரீதியாக பணியிடை நீக்கம் அதிரடியாகச் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அப்படி இருந்தும் இந்த விஷயத்தை ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் விசாகன் காதுக்குக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் விசாகனும் பாலியல் புகார் உண்மை என்று தெரியவந்தால் அந்த அதிகாரி மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறினார். இச்சம்பவம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.