சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பில் சிறைத்துறையின் பெயரும் அடிபடுவதால், தங்கள் பக்க நியாயத்தை குமுறலுடன் சொன்னார், ஒரு சிறை அலுவலர் -
உரலுக்கு ஒருபக்கம் இடின்னா, மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி. எங்க நிலைமையோ அதைவிட மோசம். சிறைத்துறையில், சார்நிலைப் பணி புரியும் துணைச் சிறை அலுவலர், உதவிச் சிறை அலுவலர், முதல் தலைமைக் காவலர், முதல்நிலைக் காவலர், இரண்டாம்நிலைக் காவலர் போன்றோருக்கு, நாலு பக்கமும் இடி. இதுதான் சிறைத்துறை பணியாளர்களின் நிலை. நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது சிறைத்துறையின் பணி.
அரசு மருத்துவர், சிறையில் வைப்பதற்கு தகுதி உடையவர் என்ற தகுதிச் சான்றை மெடிக்கல் பெர்பாமாவில் எழுதி, ஒருவரை சிறைக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நபரை, காவல்துறையினர் நள்ளிரவில் அழைத்து வருவர். அவரை அனுமதித்தே தீரவேண்டும். சிறைத்துறையினர், நீதிபதியைக் கேட்கமுடியாது. மருத்துவ அதிகாரியைக் கேட்க முடியாது. காவல்துறை அதிகாரிகளைக் கேட்க முடியாது. சிறைத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்கவே முடியாது. காரணம், இன்றைய நிலையில், சிறைத்துறை நிர்வாகமே, காவல்துறையின் கையில் என்றாகிவிட்டது.
2002-ம் வருடத்திலிருந்தே, சிறைத்துறை காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. காவல்துறையினர் நையப்புடைத்து கொண்டுவரும் சிறைவாசிகளை அனுமதி எடுக்க மறுத்தால்,சிறைத்துறையில் உளவு மற்றும் விழிப்பு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து, அனுமதி எடுக்க உத்தரவு வரும். மறுத்தால் முடிந்தது கதை. நீதிபதி உத்தரவுப்படி, அனுமதி எடுக்கவேண்டும். காயத்தின் தன்மை குறித்து மருத்துவ அதிகாரியிடம் முறையிட்டால், நீ மருத்துவரா? நான் மருத்துவரா? என்று கேட்பார்.
சிறைத்துறையினர் அனுமதி எடுக்க மறுத்தால், சிறை எந்தக் காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறதோ, அந்தக் காவல்நிலைய அதிகாரிகளிடமிருந்து, சிபாரிசு அல்லது மிரட்டல் வரும். இறுதியாக சிறைத்துறை உளவுப் பிரிவு சார்பு ஆய்வாளர் பரிந்துரைப்பார், அல்லது மிரட்டுவார். இதுகுறித்து, சிறைத்துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்தால், லோக்கல் ஸ்டேஷனை அனுசரித்துப் போ என்று அட்வைஸ் பண்ணுவார். இது எல்லாவற்றையும்விட, சிறையில் அடி எப்படி விழுந்தது எனக் கேட்பார்கள், காவல் நிலையத்தில் அடித்ததாகக் கூறக்கூடாது என மிரட்டப்பட்டே அழைத்து வருவார்கள். அந்த சிறைவாசிகளும், அவர்கள் என்ன சொல்லி கொடுத்தார்களோ அதைத்தான் கூறுவர். இதெல்லாம், சிறை சார்நிலைப் பணியாளர்கள் தினமும் சந்தித்துவரும் பிரச்சனைகள். இது தெரியாமல்தான், சிறைப் பனியாலர்களைக் குறை கூறுகின்றனர். சிறைப் பணியாளர்கள்தான், ஒவ்வொரு நிகழ்வையும் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு விழிப்போடு இருக்க வேண்டும்.” என்று நொந்துகொண்டார்.
அடைபட்டுள்ள சிறைவாசிகளுக்கு உள்ள சுதந்திரம்கூட சிறைத்துறையினருக்கு இல்லையென்பதால்தான், கொடுமைகள் அரங்கேறுகின்றனவா?