தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. குற்றவாளிகளைத் தண்டிக்காமல் உடலை வாங்கமாட்டோம் என மறுத்து 2015-ஜூன் 25 ஆம் தேதி கோகுல் ராஜின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மரண வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா 2015 செப்.15 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை சம்பவம் தொடர்பாக பலகட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பள்ளியப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி இறந்து விட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 116 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மாதம் பிப்.9 ஆம் தேதி முடிந்த நிலையில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள். இந்த 10 பேருக்கான தண்டனை விபரம் வரும் 8 ஆம் தேதி வெளியிடப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''ஓமலூர் சித்ராவின் மகன்தான் கோகுல்ராஜ். கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மாணவர். அவரோடு படித்துக்கொண்டிருந்தவர் தோழி சுவாதி. இருவரும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற நிலையில் அங்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கோகுல்ராஜ் மற்றும் சுவாதியிடம் விசாரித்துள்ளனர். அதில் கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என தெரிந்துகொண்ட யுவராஜ் செல்போனை பிடுங்கியதோடு கோகுல்ராஜை மிரட்டி உடன் கூட்டிச் சென்றுள்ளார். அடுத்த நாள் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா குற்றச்சாட்டப்பட்ட பலரை கைது செய்தார். அதன்பின் விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் சுவாதி பிறழ் சாட்சி அளித்த போதிலும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்த சிசிடிசி காட்சி முக்கிய ஆதாரமாக இருந்ததால் கொலை குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது'' என்றார்.