நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் விழா கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக முக்கிய இடங்களான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தலைமைச் செயலகம், சென்னை மாநகராட்சி கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் விதமாக மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் கொடியேற்ற வந்த முதல்வருக்கு காவலர்களின் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
அதன் பிறகு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய போது தமிழகத்தின் முதலமைச்சராக நான் அடையும் மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் தமிழன் என்கின்ற அடிப்படையில் உணர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. இந்த இந்திய துணை கண்டத்திலேயே விடுதலைக்காக முதல் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான். 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றியது என்றால் ஒரு நெல்மணியை கூட உனக்கு கப்பம் கட்ட முடியாது என்று 1755 ஆம் ஆண்டு சொன்னவர் நெற்கட்டான் செவல் பூலித்தேவர். சிவகங்கைக்கு அருகே உள்ள பனையூரைச் சேர்ந்த மண்டியிடாத மானப்போர் புரிந்த மாவீரன் மருதநாயகம் கொல்லப்பட்ட ஆண்டு 1764. 'தானம் கேள் தருகிறேன் வரி என்று கேட்டால் தரமாட்டேன்' என்று சொன்ன மாவீரன் தான் கட்டபொம்மன். அவர் தூக்கிலிடப்பட்ட ஆண்டு 1799. தூக்கு மேடைக்கு செல்லும்போது கூட தன்னை காட்டிக் கொடுத்தவர்களைப் பார்த்து சிரித்தபடியே சென்றதாக அன்றைய கவர்னர் எட்வர்ட் கிளைவுக்கு தளபதி பானர்மேன் எழுதிய கடிதம் கூறுகிறது. கட்டபொம்மனின் மொத்த படைக்கும் தளபதியாக இருந்தவர் மாவீரன் சுந்தரலிங்கம். அவரது மாமன் மகள் வடிவு. தற்கொலை படை தாக்குதலை நடத்தியவர். காளையார் கோவில் தாக்குதலில் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதும் சினம் கொண்ட வேங்கையாக வெளியேறி தன்னைப் போன்ற விடுதலை தாகம் கொண்ட அனைவரையும் அணி சேர்த்து விடுதலைப் படை அணிகட்டியவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் வசம் இருந்த சிவகங்கையை எட்டு ஆண்டு போருக்கு பின்னால் மீட்டு மீண்டும் ராணியாக அமர்ந்தவர் வேலு நாச்சியார். தனது உடையில் நெருப்பை வைத்துக்கொண்டு பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கில் தாக்குதல் நடத்தியவர் குயிலி. சின்ன மருதுவும் பெரிய மருதுவும் பீரங்கிகளுக்கு முன்பு வளரியால் வாகை சூடியவர்கள். இவர்கள் வைத்திருந்த வளரிக்கு முன்னால் பீரங்கிகள் சரியும் என்று எழுதினான் பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் வெல்ஸ் இது 1801 ஆம் ஆண்டு. சென்னிமலைக்கும் சிவமலைக்கும் இடையிலே ஒரு சின்னமலை என்று சொல்லி மறைந்து இன்றும் வரலாற்றில் பெரும் மாலையாக வாழ்பவர் தீரன் சின்னமலை. அவரது போர்படையிலும், ஒற்றர் படையிலும் செயல்பட்ட தளபதி பொல்லான் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு பயம் என்றால் என்னவென்று காட்டப்பட்டது.
நான் சொன்னது அனைத்தும் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பே நடந்தவை. 1857 சிப்பாய் புரட்சியை தான் முதலாவது இந்திய விடுதலை போர் என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு முன்னால் தெற்கில் அதுவும் தமிழ்நாட்டில் நடந்தவை தான் இவை. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று கொடியை ஏற்றும்போது தமிழனாக பெருமைப்படும், உணர்ச்சிவசப்படும் நிலை ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.
அடிமைப்படுத்துதல் என்று தொடங்கியதோ அன்றைய நாளில் விடுதலை முழக்கத்தை எழுப்பிய மண் நமது தமிழ்மண். 200 ஆண்டுகள் ஆடு போல் வாழ்வதைவிட இரண்டே நாட்கள் புலியாக வாழ்வது மேல் என்று சொன்ன திப்புசுல்தானின் தீரம் கொண்ட படை வீரர்களை கொண்டிருந்த மண் நம்முடைய தமிழ் மண். வா.உ.சிதம்பரனார் செலுத்திய கப்பலும், சுப்ரமணிய சிவாவின் பேச்சும், பாரதியின் பாட்டும், தமிழ் தென்றல் திருவிக நடத்திய பத்திரிகையும், பெரியார் விற்ற கதர் ஆடைகளும், செண்பகராமன், வீரவாஞ்சிநாதன் போன்றவர்கள் நடத்திய வீரப் போராட்டங்களும், பீரங்கியால் மார்பு பிளக்கப்பட்ட நிலையிலும் நெஞ்சுயர்ந்து நின்ற அழகுமுத்து கோனின் வீரமும், 'கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது' என்று பாடிய காந்தியைச் செம்மல் நாமக்கல் கவிஞரின் தமிழும், தமிழ் போராட்டங்களால் ஆங்கிலேய அரசை உலுக்கிய சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் ஆற்றலும், பகத்சிங்ற்கு கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையை கண்டு கொதித்து எழுந்து அவரது 'நான் ஏன் நாத்திகனானேன்' என்ற நூலை மொழிபெயர்த்து தந்தை பெரியார் மூலமாக வெளியிட்டதற்காக சிறை கொடுமை அனுபவித்த பொதுவுடமை போராளி தோழர் ஜீவாவின் தியாகமும், வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகமும், வெள்ளையனே வெளியேறு என போராட்டக் களங்கள் கண்டு கொல்கத்தா, வேலூர் என பல மாதங்கள் சிறையில் கழித்த கர்மவீரர் காமராசரின் நாட்டுப்பற்றும், காந்தியின் 'யங் இந்தியா' இதழின் ஆசிரியராக பணியாற்றியதுடன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஓராண்டிற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பாவின் காந்தியப்பற்றும், அண்ணல் அம்பேத்கரின் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் உழைப்பும், இந்திய நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதுள்ள பற்றில் இணையற்றவராகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் வழிகாட்டுதலும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும்படை அனுப்பி வைத்த பசும்பொன் ஐயா முத்துராமலிங்கரின் வீரமும், உப்பு சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் என தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு சிறை எய்திய ஜபக்கனியின் உணர்வும், ராஜாஜி நடத்திய பயணங்களும், திருப்பூர் குமரன் தூக்கிப் பிடித்த கொடியும் இணைந்தது தான் இன்று நாம் சுவாசிக்கும் விடுதலைக் காற்று.
அதனால்தான் தியாகத்தை போற்றுவதில் திமுக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது. நாட்டுப்பற்றில் திமுக அரசு உறுதியாக இருந்து வந்துள்ளது. 1962 ஆம் ஆண்டு சீன நாட்டால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட பொழுது இந்திய நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா. 1971 ஆம் ஆண்டு இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திய போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன தீர்மானம் போட்டவர் கலைஞர்'' என்றார்.