தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் அவருடைய நண்பர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரப்பா. இவருடைய மகன் லோகேஷ் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜெயந்தி (30). லோகேஷூம், தளி அருகே உள்ள குருபரப்பள்ளியைச் சேர்ந்த சம்பங்கி ராமரெட்டி மகன் யதுபூசன் ரெட்டி (45) என்பவரும் நண்பர்கள். ஞாயிற்றுக்கிழமை (மே 23ம் தேதி) இரவு, யதுபூசன் ரெட்டி தனது நண்பர்கள் மூன்று பேருடன் லோகேஷின் வீட்டிக்கு காரில் வந்துள்ளார்.
இரவு நேரம் என்பதால் வீட்டில் இருப்போருக்குத் தொந்தரவாக இருக்கும் எனக்கூறி, லோகேஷை வீட்டுக்கு வெளியே வருமாறு அழைத்துப் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று யதுபூசன் ரெட்டி தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து லோகேஷை சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறியபடி கீழே சரிந்து விழுந்தார்.
இதையடுத்து, யதுபூசன் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரும் காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடி வந்த ஜெயந்தி, அங்கே கணவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே லோகேஷ் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை காவல்துறை டி.எஸ்.பி. சங்கீதா, தளி காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த லோகேஷிடம், யதுபூசன் ரெட்டி அவசரத் தேவைக்காக 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். லோகேஷ் பிடிகொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்தப் பணத்தை எப்படியும் வாங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சம்பவத்தன்று யதுபூசன் ரெட்டி நண்பர்களுடன் லோகேஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அன்றிரவும் அவர் பணம் கொடுக்க முடியாது எனக் கறாராகக் கூறியதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் யதுபூசன் ரெட்டி தனது கைத்துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்று விட்டுத் தப்பிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
எனினும், கொலை செய்யும் நோக்கத்துடன்தான் கூட்டாளிகளுடன் யதுபூசன் சம்பவ இடத்துக்கு வந்தாரா? அவர்களுக்குள் வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெல்லூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.